தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாட்டாளிக் கட்சியின் மூன்று புதுமுகங்கள் அறிமுகம்

4 mins read
53fb3b97-4056-41a5-8838-eee09876e4fe
பாட்டாளிக் கட்சியின் புதுமுகங்கள் (இடமிருந்து) வழக்கறிஞர் சுஃப்யான் மிக்காயில் புத்ரா முகம்மது காமில், 33, மூத்த வழக்கறிஞர் ஹர்ப்ரீட் சிங், 59, நிதிச் சேவைகள் துறையில் தலைமைத்துவப் பொறுப்பிலுள்ள ஜஸ்பர் குவான் ஹொன் வாய், 46. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சி, மூன்று புதுமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மூத்த வழக்கறிஞர் ஹர்ப்ரீட் சிங் நெஹால், 59, வழக்கறிஞர் சுஃப்யான் மிக்காயில் புத்ரா முகம்மது காமில், 33, நிதிச் சேவைகள் துறையில் தலைமைத்துவப் பொறுப்பு வகிக்கும் ஜஸ்பர் குவான் ஹொன் வாய், 46, ஆகியோர் அந்த மூவர்.

சிங்கப்பூர் ஒரு திருப்புமுனையில் உள்ளதால் வசதியான வாழ்வைவிட்டு எதிர்க்கட்சியில் சேர்ந்ததாகக் கூறிய திரு ஹர்ப்ரீட் சிங் ஒவ்வொரு சிங்கப்பூரரும் குரல்கொடுக்க வேண்டும் என்றார்.

பாட்டாளிக் கட்சியின் புதுமுகமான மூத்த வழக்கறிஞர் ஹர்ப்ரீட் சிங்.
பாட்டாளிக் கட்சியின் புதுமுகமான மூத்த வழக்கறிஞர் ஹர்ப்ரீட் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் முதுநிலைப் பட்டம் பெற்ற திரு ஹர்ப்ரீட் சிங், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக 2007ல் பதவியேற்றார். 2019 முதல் ‘ஆடண்ட் சேம்பர்ஸ்’ சட்ட நிறுவனத்தின் நிர்வாகப் பங்காளியாக இருந்துள்ளார்.

“சிங்கப்பூரர்கள் விலைவாசி உயர்வு, நிலையற்ற வேலைச்சூழலுடன் சிரமப்படுகின்றனர். நியாயமற்ற அரசியல் சூழல் நிலவுகிறது என்ற உணர்வும் அதிகரித்து வருகிறது. இளையர்கள் இங்கு தம் கனவுகளைக் கட்டமுடியுமா எனச் சந்தேகிக்கின்றனர். ஓய்வுக்காலத்துக்குப் போதுமான அளவு சேமிப்பு இருக்கிறதா என முதியோர் கவலைப்படுகின்றனர்,” என்றார் அவர்.

Watch on YouTube

“சிங்கப்பூரின் நிலத்தில் அரசாங்கம் 80-90%க்கு உரிமை கொண்டாடுவதால், பொது வீட்டு விலைகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் நம்மிடத்தில் உள்ளது,” என்றார் அவர்.

சிங்கப்பூரின் நிதியிருப்பில் அளவுக்கதிகமாகச் சேமிப்பது ஆபத்தானது என்றும் இன்றைய தலைமுறையைப் போதுமான அளவு பராமரிப்பதும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.

எதிர்காலத்துக்கு மூன்று முக்கிய முன்னுரிமைகள் முன்வைப்பு

“கட்டுப்படியான விலைவாசியையும் நிதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டும். கழிவறைகளைச் சுத்தப்படுத்தும் நிலைக்கு முதியோர் தள்ளப்படக்கூடாது. மத்திய சேமநிதிக் கணக்குகளிலிருந்து கூடுதல் தொகை பெற்று அவர்கள் கெளரவத்துடன் ஓய்வுபெற வேண்டும்.

“எதிர்காலத்துக்குத் தயார்ப்படுத்தும் திறந்த, விரிவான கல்விக் கட்டமைப்பு தேவை. வேறுபட்ட கண்ணோட்டங்களுக்குக் கூடுதலாக குரல்கொடுக்கும் பிரதான ஊடகங்கள், இன்னும் சமமான அரசியல் தேவை. இல்லாவிட்டால் புத்தாக்கமிக்கவர்களை நம்மால் எதிர்பார்க்க முடியாது.

“மக்கள் கழகம், தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு போன்றவை அரசாங்கத்திடமிருந்து சுதந்திரமாக இருக்கவேண்டும். கலைச் சமூகத்தையும் விமர்சகர்களையும் மரியாதையுடன் நடத்தவேண்டும். வேறுபட்ட அரசியல் கண்ணோட்டம் இருப்பதால் ஒரு கலைஞருக்கு நிதியாதரவு அளிப்பதிலிருந்து பின்வாங்க மாட்டோம்,” என்றார் திரு ஹர்ப்ரீட் சிங்.

“தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியிருப்பாளர்களுக்காக என் நேரத்தைச் செலவிடுவேன்,” என்றார் திரு ஹர்ப்ரீட் சிங்.

வேலையிலிருந்து நீங்கி அரசியல் வாழ்வு தொடக்கம்

பாட்டாளிக் கட்சி அறிமுகப்படுத்திய இரண்டாவது புதுமுகமான வழக்கறிஞர் சுஃப்யான்.
பாட்டாளிக் கட்சி அறிமுகப்படுத்திய இரண்டாவது புதுமுகமான வழக்கறிஞர் சுஃப்யான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சி அறிமுகப்படுத்திய இரண்டாவது புதுமுகமான வழக்கறிஞர் சுஃப்யான், இதற்கு முன்பு ஒரு சட்ட நிறுவனத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். கட்சி சார்பற்ற நிறுவனத்தின் கொள்கையால் அவர் வேலையிலிருந்து நீங்க வேண்டியிருந்தது. சென்ற ஆண்டு முதல் அவர் காக்கி புக்கிட்டில் பாட்டாளிக் கட்சிக்காக உதவி வருகிறார். பட்ஜெட் 2025 சார்ந்த நாடாளுமன்றப் பணிகளுக்கும் அவர் உதவியுள்ளார்.

“பொருள், சேவை வரி உயர்வுக்குப் பதிலாக மற்ற வழிகளில் பொருளியல் வளர்ச்சிக்குத் தீர்வுகாண்பேன். வீட்டு விலையைக் கட்டுப்படுத்த, குறிப்பாக முதன்முறை வீடு வாங்குவோருக்கு உதவ மாறுபட்ட பிடிஓ குத்தகையைப் பரிந்துரைப்பேன்,” என்றார் திரு சுஃப்யான்.

“சில முதலாளிகளுக்குத் திறந்த மனப்பான்மை உள்ளது; சிலர் அப்படியில்லை. அரசியலில் நிற்க சட்ட நிறுவனத்திலிருந்து விலகவேண்டும் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினையே,” என்றார் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்.

பாட்டாளிக் கட்சியின் ஜஸ்பர் குவான்.
பாட்டாளிக் கட்சியின் ஜஸ்பர் குவான். - படம்: ‌ஷின் மின் அன்றாடச் செய்தி

முன்னாள் ஆசிரியரான ஜஸ்பர் குவான், 14 ஆண்டுகளுக்குமேல் நிதித்துறையில் இருந்துள்ளார். 2011ல் ஓசிபிசி வங்கியில் சேர்ந்த அவர், ‘ஃபிராங்க் பை ஓசிபிசி’ போன்ற முக்கியத் திட்டங்களை வழிநடத்தினார். தற்போது ‘வீசா வர்ல்ட்வைட்’ நிறுவனத்தில் ஆசிய பசிபிக் அளவில் தலைமைத்துவப் பொறுப்பில் அவர் உள்ளார். 2020 பொதுத் தேர்தலை அடுத்து பாட்டாளிக் கட்சியில் அவர் தொண்டூழியராகச் சேர்ந்தார்.

“எதிர்காலத்துக்குத் தயார்ப்படுத்தும், மனவுளைச்சல் குறைவான கல்வி முறைக்காக நான் விவாதிப்பேன். செலவுமிக்க சூழலான சிங்கப்பூரில் சிறுவர்களை வளர்ப்பது எவ்வளவு சிரமம் என்பது எனக்குத் தெரியும். குடும்பங்களை ஆதரிக்கும் கொள்கைகளை நான் முன்வைப்பேன்,” என்றார் திரு குவான்.

“சிங்கப்பூரர்களுடன் நாம் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இளம் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகிறோம்,” என்றார் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்.

தாம் போட்டியிடக்கூடிய பல தொகுதிகளிலும் மக்கள் செயல் கட்சி நகர மன்றங்கள் ஐந்தாண்டுப் பெருந்திட்டங்கள் அறிவித்துள்ளது பாட்டாளிக் கட்சியின் தேர்தல் வாய்ப்புகளைப் பாதிக்குமா என்பது குறித்து திரு பிரித்தம் சிங் கருத்துரைத்தார்.

“எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளையடுத்து தேசிய வளர்ச்சி அமைச்சு ஏற்படுத்திய கொள்கை மாற்றங்களால், இப்போது எங்களாலும் தடையின்றி அணுகக்கூடிய வசதிகள், புதிய விளையாட்டுத் திடல்கள் போன்றவற்றை அமைக்க முடிகிறது. சமூக மேம்பாட்டுத் திட்டச் செயற்குழுவிடமிருந்து நிதியாதரவு பெறமுடிகிறது. முன்பு திட்டங்களைச் செயல்படுத்த நிதியாதரவு பெற சந்தித்த சிரமமான சூழலைவிட இன்று நிலைமை எவ்வளவோ மேம்பட்டுள்ளது. அதற்குக் காரணம் சிங்கப்பூரர்களின் குரலே.

“புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவோர் முதலில் குடியிருப்பாளர்களிடம் பேசித் தேவைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். அதன் பிறகு முந்தைய குழு என்ன செய்ய விரும்பினார்கள் என்பதையும் கருத்தில்கொள்ளலாம்,” என்றார் திரு பிரித்தம் சிங்.

குறிப்புச் சொற்கள்