தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமய அடிப்படையிலான அரசியலில் பாட்டாளிக் கட்சி ஈடுபடாது: பிரித்தம் சிங்

3 mins read
f55397d7-63d5-442c-bd9a-9018e4fb789b
வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஒரு குறிப்பிட்ட கொள்கையை மட்டும் பாட்டாளிக் கட்சி ஒருபோதும் முன்வைக்காது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார் பிரித்தம் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமயம் சார்ந்த அரசியலை பாட்டாளிக் கட்சி ஒருபோதும் முன்னெடுக்காது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் உறுதிபடக் கூறியுள்ளார்.

அரசியல் ஆதாயங்களுக்காகச் சமயக்கூறுகளைக் கையிலெடுப்பது குறித்து தமது கட்சி சனிக்கிழமை (ஏப்ரல் 26) காலை வெளியிட்ட அறிக்கை தொடர்பான கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்தார் திரு சிங்.

பாட்டாளிக் கட்சி, மலாய்-முஸ்லிம் சமயத் தலைவர்களுடன் சந்திப்புக் கூட்டத்தை நடத்தியபோது அந்தச் சமய போதகரும் தலைகாட்டினார் என்றும் ஆயினும், அவர் அக்கூட்டத்திற்கு வருவார் என்பதற்கு எந்த முன் அறிகுறியும் இல்லை என்றும் திரு சிங் விளக்கமளித்தார்.

அரசாங்க ஊழியர்கள், அமைச்சர்களைப் போலவே பாட்டாளிக் கட்சியினரும் பல்வேறு சமயக் குழுக்களின் தலைவர்களைச் சந்திப்பதாகத் திரு சிங் குறிப்பிட்டார்.

“பாட்டாளிக் கட்சி வெளியிட்ட அறிக்கையின்படி அரசியல் ஆதரவுக்குக் கைம்மாற்றாக எந்த வாக்குறுதிகளும் தரப்படவில்லை,” என்ற கருத்தை மீண்டும் செய்தியாளர்களிடத்தில் வலியுறுத்தினார்.

தெம்பனிஸ் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி வேட்பாளர் திரு. ஃபைசல் மனாப் போட்டியிடுவது குறித்துப் பேசிய திரு. சிங், தெம்பனிசில் அதிக எண்ணிக்கையிலான மலாய்-முஸ்லிம் வாக்காளர்கள் இருப்பதாக ஊடகங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

“ஆயினும், எங்கள் மலாய்-முஸ்லிம் வேட்பாளர்கள் யாரும் தங்கள் சமூகத்திற்கு மட்டுமே வேட்பாளர்கள் அல்லர்,” என்று திரு சிங் தெளிவுபடுத்தினார்.

திரு மனாப்புக்கு கிடைத்த வெளிநாட்டு ஆதரவு குறித்து செய்தியாளர்கள் வினவினர்.

“எங்கள் அரசியல் களம் சிங்கப்பூரர்களுக்கானது. இனம், மொழி, சமயம் பாராமல் அனைத்து சிங்கப்பூரர்களும் எங்கள் தேர்தல் அறிக்கைகள், திட்டங்கள், நாடாளுமன்ற நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு எங்களை மதிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று திரு சிங் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூர் அரசியலில் வெளிநாட்டுத் தலையீடு குறித்துப் பேசியபோது, வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஒரு குறிப்பிட்ட கொள்கையை மட்டும் பாட்டாளிக் கட்சி ஒருபோதும் முன்வைக்காது என்பதை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார்.

“ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமில்லாமல் எம்.பி.க்கள் அனைவரும் இனம், மொழி, சமயம் தாண்டி எல்லா சிங்கப்பூர்ச் சமூகங்களின் நலன்களையும் பிரதிநிதிக்கவேண்டும்,” என்றார்.

சிங்கப்பூரின் பல்லின ஒற்றுமையைச் சுட்டிக்காட்டிய திரு சிங், “சிங்கப்பூரில் அதற்கு எதிரான அரசியல் இருக்காது,” என்றார்.

வெளிநாட்டினர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தேர்தல் தொடர்பான விளம்பரங்களைச் சிங்கப்பூரர்களின் பார்வையிலிருந்து நீக்கும்படி தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், ‘மெட்டா’ தளத்திற்கு நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின்கீழ் ஏப்ரல் 26ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளதை தொடர்ந்து அவர் தனது கருத்துகளை தெரிவித்தார்.

“அந்தச் சமயப் போதகர் தமது நிலைப்பாட்டைப் பாட்டாளிக் கட்சி கையிலெடுக்கும் என எதிர்பார்த்தால், அவர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்,” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சிங்கப்பூர் அரசியலில் வெளிநாட்டுத் தலையீடு குறித்து முன்னாள் பாட்டாளிக் கட்சி தலைவர் லோ தியா கியாங், சனிக்கிழமை காலை தெம்பனிஸ் சந்தை,உணவு மைய உலாவின்போது கருத்து தெரிவித்தார்.

சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு என்றும் அதன் அரசியலில் வெளிநாட்டுத் தலையீட்டை அனுமதிக்காமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சீன மொழியில் தெரிவித்தார்.

“இனம், சமயம் என்பதை அடிப்படையாகக் கொண்டு பாட்டாளிக் கட்சி அரசியலில் ஈடுபடுவதில்லை,” என்று திரு சிங்கின் கருத்துகளை திரு லோவும் எதிரொலித்தார்.

குறிப்புச் சொற்கள்