புகைமூட்டத்திலும் ஊழியர்கள் நலன் கட்டாயம்: மனிதவள அமைச்சு

புகைமூட்டத்திலும் ஊழியர்கள் நலன் கட்டாயம்: மனிதவள அமைச்சு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Oct 2026 - 8:31 pm

2 mins read

சிங்கப்பூரில் புகைமூட்டம் அதிகரித்து வரும் வேளையில், ஊழியர்களின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது முதலாளிகளின் விருப்பத் தேர்வல்ல, அது கட்டாயப் பொறுப்பு என்று மனிதவளத் தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

புகைமூட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், அதன் நிலவரம் சார்ந்தவற்றை விளக்கும் வகையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் லாவ், பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின் கீழ் ஊழியர்களைப் புகைமூட்டத்திலிருந்து பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

24 மணி நேரக் காற்றுத்தரக் குறியீடு, பிஎஸ்ஐ 200ஐத் தாண்டி மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டும்போது, வெளிப்புறங்களில் கடினமான பணிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், மூத்தோர், கர்ப்பிணிப் பெண்கள், நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய ஊழியர்களின் வெளிப்புற பணிகளைக் குறைக்க வேண்டும் என்றும் நீண்ட நேரம் வெளியில் பணியாற்றுபவர்களுக்கு என்95 முகக்கவசங்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார் அமைச்சர்.

பிஎஸ்ஐ குறியீடு கடுமையாக அதிகரித்து ஆபத்தான நிலையை எட்டினால், ஆரோக்கியமான ஊழியர்களுக்கும் வெளிப்புற பணிகளைக் குறைக்க வேண்டும் என்றும், வேலையின் தீவிரத்தைக் குறைத்து உள்ளரங்கில் ஓய்வு வழங்க வேண்டும் என்றும், அத்தியாவசியமற்ற பணிகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

புகைமூட்டம் சூழத் தொடங்கியதிலிருந்தே செப்டம்பர் மாதம் முதல் மனிதவள அமைச்சு 400க்கும் மேற்பட்ட வேலையிடங்களில் ஆய்வுகளை நடத்தியுள்ளதாக குறிப்பிட்ட திருவாட்டி லாவ், உரிய விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய நிறுவனங்களுக்குத் தவறுகளை உடனடியாக சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், புகைமூட்டம் நீடிக்கும் வரை ஆய்வுகள் தொடரும் என்றும் எச்சரித்தார்.

அதேவேளை இணையவழி ஊழியர்கள் சட்டத்தின்கீழ் உணவு விநியோகம், உள்ளிட்ட சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் தங்கள் ஊழியர்களைப் பாதுகாக்கும் கடமை உள்ளதாகவும் கூறினார். 

புகைமூட்டம் காரணமாக விநியோகம் செய்ய கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால், ஊழியர்களின் ஊக்கத்தொகை, வேலை ஒதுக்கீடு அல்லது வருமானத்தில் எந்தவித தண்டனை நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

கிராப், ஃபுட்பாண்டா போன்ற நிறுவனங்கள் தேசிய விநியோக ஊழியர் சங்கத்துடன் இணைந்து என்95 முகக்கவசங்களை வழங்கி வருவதை வரவேற்பதாகச் சுட்டினார் திருவாட்டி லாவ். மேலும் புகைமூட்டத்தால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு பள்ளிகள் வீட்டிலிருந்து கற்கும் முறைக்கு மாறினாலோ அல்லது குடும்பத்தினர் நோய்வாய்ப்பட்டாலோ, முதலாளிகள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றும் வாய்ப்பை அல்லது விடுப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மையை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

இச்சூழலில் அமைச்சின் அறிவுரைகளைப் பின்பற்றாமல் போகும் பட்சத்தில் பாதிக்கப்படும் ஊழியர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை முதலாளிகளிடம் தீர்க்க முடியாவிட்டால், அவர்கள் மனிதவள அமைச்சிடம் புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
புகைமூட்டம்சிங்கப்பூர்ஊழியர்மனிதவள அமைச்சு