தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுமுகங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க இரட்டிப்பு முயற்சி: அமைச்சர் எட்வின் டோங்

2 mins read
a612add1-1087-4fb5-bd30-939cd91a49b8
வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதி மசெக வேட்பாளர்கள் (இடமிருந்து) ஹஸ்லினா அப்துல் ஹலிம்,  டான் கியட் ஹாவ், எட்வின் டோங், ஜெசிக்கா டான், தினே‌ஷ் வாசுதாஸ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாங்கள் செய்வதற்கு நிறைய பணிகள் இருப்பதாகவும் அவற்றை மேற்கொள்ள வலுவான, மாறுபட்ட திறன் கொண்ட அணி தயாராக உள்ளதாகவும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து, ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் தமது தலைமையில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்து வைத்துப் பேசிய அவர், “எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. புதுமுகங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க இரட்டிப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்,” என்றார்.

துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் விட்டுச்சென்றுள்ள இடம் பெரிது என்ன்றாலும், அவ்விடத்தை நிரப்ப திறமையானவர்கள் உள்ளதாக அவர் கூறினார். மக்களுக்குச் சேவையாற்ற கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் சொன்னார்.

தாமும் மரின் பரேட் தொகுதியிலிருந்து வந்தவர் என்பதால், ஈஸ்ட் கோஸ்ட் தொகுதிவாசிகளைச் சென்றடைய நோக்கம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏறத்தாழ அனைத்துத் தொகுதி வேட்பாளர்களையும் மசெக முன்னரே அறிவித்திருந்த நிலையில், அறிவிக்காமல் வைத்திருந்த சில தொகுதிகளில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியும் ஒன்று.

தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், ஜெசிக்கா டான் ஆகியோருடன் புதுமுகங்களான ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாகி தினே‌ஷ் வாசுதாஸ், ஆலோசனை நிறுவனமான டெனியோவின் மூத்த துணைத் தலைவர் ஹஸ்லினா அப்துல் ஹலிம் ஆகியோரும் மசெக வேட்பாளர்களாக அங்குக் களமிறங்குகின்றனர்.

“மசெக வேட்பாளராகவும், அதனைத் தாண்டி உங்களுக்குத் தொண்டனாக இருப்பதிலும் மகிழ்ச்சி. உங்கள் பிரதிநிதியாக இருக்கும் நற்பேறு கிட்டினால் மூத்தோருக்குச் சேவையாற்றும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைக்கும்,” என்றார் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய திரு தினே‌ஷ்.

மேலும், ஒருங்கிணைந்து செயல்பட்டால் வாழ்க்கைச் செலவினப் பிரச்சினையை எதிர்கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட அவர், ஈஸ்ட் கோஸ்ட் மக்களுக்கு மட்டுமின்றி சிங்கப்பூர் இந்தியர் அனைவருக்கும் சேவையாற்ற தமக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் மசெக, யீ ஜென் ஜோங் தலைமையிலான பாட்டாளிக் கட்சியுடன் மோதுகிறது. அத்தொகுதியில் 150,691 வாக்காளர்கள் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்