குடல்புற்றுநோயிலிருந்து வெற்றிகரமாக மீண்டுவந்த 62 வயது திரு அருண் ரோசையா, முதுமையிலும் தமது உடற்கட்டுக்காகச் சமூக ஊடகங்களில் புகழ்பெற்று விளங்குகிறார்.
இருப்பினும், தாம் மட்டும் கட்டுடலுடன் இருப்பதோடு நின்றுவிடாமல், தம் வயதையொத்த மற்ற ஆடவரையும் உடற்பயிற்சி செய்ய அவர் ஊக்குவிக்கிறார்.
உடல்நலம் பேணுவதற்கு நெடுநேரம் உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள், நாள்தோறும் 15 நிமிடங்களாவது அதற்காகச் செலவிடலாம் என்பது திரு அருணின் அறிவுரை.
10 உட்லண்ட்ஸ் டிரைவ் 17 என்று முகவரியில் அமைந்துள்ள அமைந்துள்ள யூசுஃப் இஸ்ஹாக் பள்ளிவாசலின் முதன்மைத் தொழுகை மண்டபத்தில் இவ்வகுப்பு ஞாயிறுதோறும் நடைபெற்று வருகிறது.
புற்றுநோயால் உடல் நலிவுற்று, படுத்த படுக்கையாக இருந்த நிலையிலிருந்து வெற்றிகரமாக மீண்ட தமக்கு, உடற்பயிற்சியைத் தொடங்கும்போது பலர் எதிர்நோக்கும் சிரமங்களையும் வேதனையையும் உளப்பூர்வமாக உணர முடிவதாகத் திரு அருண் தெரிவித்தார்.
சொந்தத் தொழில் செய்பவராக, தனிப்பட்ட கட்டுடல் பயிற்றுநராகக் கடந்த 14 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் திரு அருண், அதற்குமுன் 38 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டபோது, நடமாடச் சிரமப்பட்ட முதியவர்கள் பலர் சக்கர நாற்காலி, நடமாட்டத் துணைக்கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியதைக் கவனித்ததாகத் திரு அருண் கூறினார்.
“இறைவன் எனக்குப் புத்தம்புதிய வாய்ப்பை அளித்திருப்பதாக எண்ணுகிறேன். என்னுடைய திட்டத்துடன் 2023ஆம் ஆண்டில் பள்ளிவாசல் நிர்வாகத்தை அணுகினேன். இருந்தபோதிலும், அதனைச் செயல்படுத்தச் சிறிது காலதாமதம் ஆனது,” என்று அவர் கூறினார்.
பள்ளிவாசலின் சமய ஆசிரியர், உடல்நலத்தைப் பற்றிய உரை ஒன்றை இவ்வாண்டு வழங்கியது திரு அருணுக்கு மேலும் ஊக்கமளித்தது.
நாற்காலியைப் பயன்படுத்தி எளிய முறையில் உடற்பயிற்சிகள் செய்யப்படுகின்றன. தற்போது 10 முதல் 15 பேர் அந்த உடற்பயிற்சி வகுப்புகளுக்கு வருகின்றனர்.
“இங்கு வரும் பலரும் பக்கவாதம், மாரடைப்பு போன்ற உடல்நலப் பாதிப்புகளுக்குச் சிகிச்சை பெற்றவர்கள். பங்கேற்பாளர்களில் ஆக மூத்தவர்க்கு 76 வயது,” என்று அவர் கூறினார்.
தங்களது உடல்நலத்தைச் சீரமைப்பதுடன் நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றையும் அந்த மூத்த முடிமக்கள் வளர்த்துக்கொள்வதைக் காண்பதில் மனநிறைவு அடைவதாகத் திரு அருண் சொன்னார்.
உடற்பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற ஆடவர் பலரும் அவர்களது மகள்களால் ஊக்குவிக்கப்பட்டதாகத் திரு அருண் குறிப்பிட்டார். தொடர்ச்சியான உடற்பயிற்சி நல்ல ஆயுளையும் மேம்பட்ட உடல்நலத்தையும் நல்கும் என்றும் அவர் கூறினார்.
உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு வயது தடையில்லை என்பதற்கு இத்திட்டமே மிக நல்ல எடுத்துக்காட்டு என்று பள்ளிவாசலின் சமய ஆசிரியர் அப்துல் ஃபத்தா தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“கேலிப் பேச்சுக்கும் பிறரை எடைபோடும் சிந்தனைக்கும் இங்கு இடமில்லை. அனைவரையும் ஊக்குவித்து, அவர்களது தற்சார்பையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதே இதன் நோக்கம்,” என்று அவர் கூறினார்.
