சிங்கப்பூரில் வேலையிட மரணங்கள் 2024ஆம் ஆண்டில் 43ஆக அதிகரித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 36ஆக இருந்தது
வேலையிடங்களில் வாகனம் தொடர்பான சம்பவங்களால் ஆக அதிகமான மரணங்கள் பதிவானது.
அதற்கு அடுத்த நிலையில், மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டதாலும் நீரில் மூழ்கியதாலும் கட்டுமானக் கட்டமைப்புகள் மற்றும் சாதனங்களும் சரிந்து விழுந்ததாலும் வேலையிட மரணங்கள் அதிகளவில் ஏற்பட்டன.
இந்தத் தகவலை மனிதவள அமைச்சு (மார்ச் 26) வெளியிட்டது.
2024ஆம் ஆண்டில் கட்டுமானத்துறை, போக்குவரத்துத்துறை ஆகியவற்றுடன் தொடர்புடைய வேலையிடங்களிலும் கிடங்குகளிலும் 34 பேர் மாண்டனர்.
கடந்த ஆண்டு கட்டுமானத்துறையுடன் தொடர்புடைய வேலையிடங்களில் 20 பேர் மாண்டனர்.
2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18ஆக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டில் போக்குவரத்துத்துறையுடன் தொடர்புடைய வேலையிடங்களிலும் கிடங்குகளிலும் ஒன்பது பேர் மாண்டனர்.
2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை எட்டாக இருந்தது.
2023ஆம் ஆண்டில் கடல்துறையுடன் தொடர்புடைய வேலையிடங்களில் மரணங்கள் ஏற்படவில்லை.
ஆனால், 2024ஆம் ஆண்டில் அத்துறையுடன் தொடர்புடைய வேலையிடங்களில் ஐவர் மாண்டனர்.
2024ல், வேலையிட மரண விகிதம் ஒவ்வொரு 100,000 ஊழியர்களுக்கும் 1.2ஆக அதிகரித்தது.
2023ஆம் ஆண்டில் வேலையிட மரண விகிதம் ஒவ்வொரு 100,000 ஊழியர்களுக்கும் 0.99ஆக இருந்தது.
வேலையிட மரணங்களைத் தடுக்க பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.
“கூடுதல் திட்டங்களை முறைப்படுத்தலாம், கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று எளிதில் கூறிவிடலாம். ஆனால் அவை நிறுவனங்களின் போட்டித்தன்மையைப் பாதிக்கும். பாதுகாப்பு மிகவும் முக்கியம். எனவே, வேலைக்கு எவ்வித இடையூறும் விளைவிக்காமல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று திரு ஸாக்கி கூறினார்.
ஜூரோங் தீவில் உள்ள ‘செவ்ரோன் ஒரோனைட்’ எனும் ரசாயன உற்பத்தி நிறுவனத்தை திரு ஸாக்கி புதன்கிழமை (மார்ச் 26) நேரில் சென்று பார்த்தபோது இவ்வாறு கூறினார்.
இதற்கிடையே, 2024ஆம் ஆண்டில் வேலையிடங்களில் படுகாயம் அடைந்தோர் எண்ணிக்கை முன் இல்லாத அளவில் சரிந்தது.
ஒவ்வொரு 100,000 ஊழியர்களுக்கும் 15.9 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேலையிடத்தில் வழுக்கி விழுதல், தடுக்கி விழுதல், உயரமான இடத்திலிருந்து கீழே விழுதல், இயந்திரங்கள் தொடர்பான சம்பவங்கள் ஆகியவை ஊழியர்கள் படுகாயம் அடைந்ததற்கு காரணமாக இருந்தன.