சிங்கப்பூரில் மைல்கல்லாகக் கருதப்படும் வேலையிட நியாயத்தன்மைச் சட்டம் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் அறிவித்துள்ளார்.
இதற்குமுன் 2026ஆம் ஆண்டு அல்லாது 2027ஆம் ஆண்டு அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
“பல தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்தோம். சட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்த போதுமான கால அவகாசம் கொடுக்கப்படுவது அவசியம் என்பதை மனிதவள அமைச்சு கண்டறிந்தது,” வேலையிட நியாயத்தன்மை (சர்ச்சைத் தீர்வு) மசோதாவின் இரண்டாம் வாசிப்பின்போது டாக்டர் டான் கூறினார்.
முதலாளிகள் தங்கள் நடைமுறைகளை மறுஆய்வு செய்யவும் ஊழியர்கள் தங்கள் உரிமைகளை அறிந்துகொள்ளவும் போதுமான அவகாசம் கொடுக்கப்படவேண்டும் என்றார் அவர்.
“வேலையிடத்தில் ஏற்படக்கூடிய பாகுபாடு குறித்த புகார்களைக் கையாள மத்தியஸ்தர்களுக்கும் பயிற்சி அளிக்க அந்தக் காலகட்டம் தேவைப்படுகிறது,” என்றார் டாக்டர் டான்.
வேலையிடத்தில் ஏற்படக்கூடிய பாகுபாடு தொடர்பான சர்ச்சைகளைக் களைவதற்கான நடைமுறைகள் அடங்கிய கட்டமைப்பை மசோதா முன்வைக்கிறது. அத்தகைய புகார் அளிப்போர் எவ்வளவு இழப்பீட்டைப் பெறலாம், வழக்குடன் சம்பந்தப்பட்ட தரப்புகள் ஒவ்வொரு கட்டத்தில் என்ன செய்யவேண்டும் ஆகியவையும் அவற்றுள் அடங்கும்.
இதற்குமுன் ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட வேலையிட நியாயத்தன்மைச் சட்டம் வயது, பிறந்த இடம், பாலினம், திருமண நிலை ஆகியவற்றுக்கு எதிரான பாகுபாட்டைக் களையும் வகையில் அமைந்தது.

