வேலையிடப் பாகுபாட்டை எதிர்கொள்வதற்கான சட்ட மசோதா ஜனவரி 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு மனிதவளக் குழுக்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன. வயது, இனம், நாட்டுரிமை போன்ற அம்சங்களின் அடிப்படையிலான பாரபட்சத்துக்கு எதிராக ஊழியர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை அந்த மசோதா வழங்குகிறது.
எனினும், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, குறிப்பாக 25 ஊழியர்களைவிட குறைவானவர்களைக் கொண்டுள்ள சிறிய வர்த்தகங்களுக்கு இன்னும் அதிகமாக செய்யலாம் என்பதை அவை சுட்டின.
ஐந்து வகை அம்சங்களின் அடிப்படையில் பணியமர்த்துதல், பணிநீக்கம் செய்தல், மதிப்பிடுதல் போன்ற முடிவுகளை எடுப்பது சட்டத்துக்குப் புரம்பானது என்பதை வேலையிட நியாயத்தன்மை மசோதா குறிப்பிடுகிறது.
வயது; நாட்டுரிமை; பாலினம், திருமண நிலை, கர்ப்ப நிலை, குடும்பப் பராமரிப்புப் பொறுப்புகள்; இனம், சமயம், மொழி; உடற்குறை, மனநலப் பிரச்சினை ஆகியன அந்த ஐந்து வகை அம்சங்கள்.
புதிய சட்டத்தின்கீழ், குறைகளைக் கையாளும் நடைமுறைகளை முதலாளிகள் அமைத்து, அவை குறித்து ஊழியர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
முதலாளிகள் விசாரணை நடத்தி, செயல்முறையை ஆவணப்படுத்தி, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அதன் முடிவைத் தெரிவிக்க வேண்டும். ஊழியர்களின் ரகசியத்தன்மையும் உறுதிசெய்யப்பட வேண்டும்.
வேலையிடப் பாகுபாடுகள் குறித்து புகாரளிக்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது, சம்பளத்தைக் குறைப்பது அல்லது தொந்தரவு செய்வது போன்ற பழிவாங்கும் செயல்களை இச்சட்டம் தடுக்கும்.
இந்நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய மனிதவளக் குழுவினரும் தொழில்துறை வல்லுநர்களும், இப்புதிய மாற்றங்களுக்கு தயாராகி வருவதாகக் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
இதில், மனிதவளக் குழுக்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான திட்டங்களும் அடங்கும்.

