வேலையிட பாதுகாப்புக்கான புதிய செயற்கூட்டணி

வேலையிட பாதுகாப்புக்கான புதிய செயற்கூட்டணி

1 mins read
3d8f12be-b719-445b-828d-5d381d3be898
பொதுத்துறை கட்டுமானம் மற்றும் கட்டுமானம் சார்ந்த திட்டங்களுக்கான வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத் தகுதிநிலை கடந்த ஏப்ரல் 2024 முதல் உயர்த்தப்பட்டுள்ளது.  - படம்: எஸ்பிஎச் மீடியா

வேலை, நிலைத்தன்மைக்குரிய பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றுக்கான செயற்கூட்டணியை மனிதவள அமைச்சு இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் தொடங்கவுள்ளது.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) மனிதவள அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் இதனைத் தெரிவித்தார்.

“வேலையின் இயல்பும் ஊழியரணியும் மாறிவரும் வேளையில், புதிய வாய்ப்புகளுடன் சேர்ந்து வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சவால்கள் உருவாகியுள்ளன,” என்றார் திரு தினேஷ்.

வேலையிடத்தில் காயங்கள் ஏற்படுவதை முன்கூட்டியே தடுப்பது, காயமடைந்த பிறகு அல்லது உடல் நலிவுற்ற பிறகு வேலைக்குத் திரும்புவோருக்கு ஆதரவளிப்பது, பலவித உடல்நலத் தேவை உள்ளோருக்கு வேலையைப் பாதுகாப்பாகவும் நீடித்த நிலைத்தன்மை வாய்ந்ததாகவும் வைத்திருப்பது ஆகிய மூன்று கூறுகளின் மீது இந்தக் கூட்டமைப்பு கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.

“சவால்கள் தலைதூக்கும்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவற்றைக் கடந்து, ஒவ்வோர் ஊழியரும் தொடர்ந்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதிசெய்யலாம். அத்துடன் அவர்கள் அனைவருக்குமான வேலைவாய்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தலாம்,” என்று துணை அமைச்சர் தினேஷ் கூறினார்.

இதனால், பொதுத்துறை கட்டுமானம் மற்றும் கட்டுமானம் சார்ந்த திட்டங்களுக்கான வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத் தகுதிநிலை கடந்த ஏப்ரல் 2024 முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

“3 மில்லியன் வெள்ளிக்கு மேல் மதிப்புள்ள திட்டங்களுக்குக் குத்தகை எடுக்கும் நிறுவனங்களின் வேலைச் சூழலில், பக்குவப்பட்ட பாதுகாப்பு முறைகளைச் செயல்படுத்த இந்த மேம்பாடுகள் ஊக்குவிக்க முற்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்