2023ல் பணியிட விபத்துகளின் எண்ணிக்கை 22,787க்குக் கூடியது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 விழுக்காடு அதிகம்.
கடுமையான தாக்கம், கூரான பொருள் உடலைத் துளைத்தல், உயரத்திலிருந்து விழுதல் போன்ற சம்பவங்களால் ஏற்படும் காயங்கள் பணியிட விபத்துகளில் அடங்கும் என்றார் டான் டோக் செங் மருத்துவமனையின் பேரதிர்ச்சியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் ஆலோசகர் சுந்தர் பாலசுப்ரமணியம், 39.
டான் டோக் செங் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) நடந்த பணியிடக் காயங்கள், தடுப்பு, மேலாண்மை செயல்முறை பற்றிய பயிலரங்கில் திரு சுந்தர் இதனைப் பகிர்ந்துகொண்டார்.
டான் டோக் செங் மருத்துவமனை, பணியிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்தின் ஆதரவுடன் மத்திய வட்டார அதிர்ச்சி சேவைகள் (Central Region Trauma Services) ஏற்பாடு செய்த இந்தப் பயிலரங்கில் ஏறத்தாழ 250 பேர் கலந்துகொண்டனர்.
உயரத்திலிருந்து விழுவது, கனரகப் பொருள்களால் காயமடைவது, தீக்காயங்கள், ஆபத்தான வேதிப்பொருள்களால் ஏற்படும் காயங்கள் போன்ற பணியிட ஆபத்துகளிலிருந்து எப்படி ஊழியர்களைப் பாதுகாத்து சிகிச்சை அளிக்கலாம் போன்ற குறிப்புகளும் பகிரப்பட்டன.
மேலும், இதுபோன்ற பணியிட ஆபத்துகளைக் கையாளும் மூன்று செயல் விளக்க நிலையங்கள் அமைக்கப்பட்டன.
“பணியிடப் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் சட்டபூர்வ கட்டாயப் பயிற்சிகள் உள்ளன. அனைத்து ஊழியர்களுக்கும் தினசரி பணியிட விளக்கவுரைகள் நடத்தப்படும்,” என்றார் ‘எட் ஸுப்லின்’ கட்டுமான நிறுவனத்தின் மூத்த பாதுகாப்பு சுகாதார, சுற்றுச்சூழல் தர அதிகாரி பாண்டியன் முத்துக்கருப்பன், 55.
“குறிப்பாக, அவர்களின் வேலையில் அதிக இயந்திரங்களின் பயன்பாடு, அல்லது அதிக உடல் வலிமை தேவைப்பட்டால் நிச்சயமாக பாதுகாப்பு தொடர்பான அறிவுரையும் பயிற்சிகளும் வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
“பணியிடப் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பது, திடீரென ஏற்படும் ஆபத்துகளைக் கையாள அதிகாரிகளைத் தயார்ப்படுத்தவே இதுபோன்ற பயிலரங்குகள் உதவும்,” என்றார் திரு சுந்தர்.
“முதலுதவி பற்றிய அடிப்படை அறிவு அனைவருக்கும் இருக்கவேண்டும். பணியிடத்திலோ, பொது இடங்களிலோ ஆபத்துகள் ஏற்படலாம். கடும் காயங்களுக்கு உதவ மருத்துவ வல்லுநர்கள் உள்ளனர். ஆனால், முதலில் என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்திருப்பது முக்கியம்,” என்றார் அவர்.

