கொவிட்-19 பெருந்தொற்று ஓய்ந்துவிட்டாலும் உலகளாவிய சுகாதார ஆபத்துகள் நீடிப்பதோடு அனைத்துலக சுகாதாரக் கட்டமைப்பு இன்னும் கடுமையான அழுத்தத்தில் உள்ளது.
எனவே ஒத்துழைப்புக்கான தேவை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
ஜெனிவாவில் செவ்வாய்க்கிழமை (மே 20) நடைபெற்ற உலக சுகாதார பொதுச் சபைக் கூட்டத்தில் காணொளி வாயிலாக திரு வோங் உரையாற்றினார்.
உலக சுகாதாரத்திற்கு சிங்கப்பூர் தனது பங்கைச் செய்ய கடப்பாடு கொண்டு உள்ளது என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.
“கிருமிகளுக்கு எல்லை இல்லை. எங்கிருந்தோ கிளம்பும் நோய் எல்லா இடத்திலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.
“உலகளாவிய சுகாதாரச் சவால்களை அனைவரும் ஒன்றிணைந்து சமாளிப்பது ஒன்றே அதனைக் கடந்து முன்னேறிச் செல்வதற்கான வழி,” என்று பிரதமர் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூரின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், வெளிப்படையான, நிலையான, விதிகளின் அடிப்படையிலான பலதரப்பட்ட கட்டமைப்புக்கான சிங்கப்பூரின் கடப்பாடு உறுதியாக உள்ளது என்றார்.
“அதனால்தான் உலக சுகாதார நிறுவனத்தையும் உலகளாவிய சுகாதார நிர்வாகத்தில் அது கொண்டுள்ள பங்கையும் ஆதரிப்பதில் சிங்கப்பூர் உறுதியாக உள்ளது,” என்றார் பிரதமர்.
தொடர்புடைய செய்திகள்
உலகளாவிய பிரச்சினைகளுக்கு உலகளாவிய தீர்வே சரி என்றும் திரு வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.
நிச்சயமற்ற சூழல் உலகம் முழுவதும் நிலவினாலும் அனைத்துலக ஒத்துழைப்பு தொடர்ந்து நீடிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்ததை பிரதமர் வோங் எடுத்துக் காட்டினார்.
கடுமையான வேறுபாடுகளுக்கு இடையிலும், ஏப்ரல் மாதம் பெருந்தொற்று உடன்பாட்டின் மீது பல்வேறு நாடுகளும் ஒத்த கருத்தைத் தெரிவித்து இருந்தன. மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பலனாக அது நிகழ்ந்தது.
வருங்காலப் பெருந்தொற்றுகளைச் சமாளிப்பதிலும் உலகளாவிய தயார்நிலையிலும் மேம்பாடு காண்பதை நோக்கமாகக் கொண்டது அந்த உடன்பாடு என்றார் பிரதமர் வோங்.

