உலகப் புகழ்பெற்ற விலங்கியல், புவியியல் நிபுணர் திருவாட்டி ஜேன் குடால் தமது 91வது வயதில் அமெரிக்காவில் காலமானார் என்று அக்டோபர் 2ஆம் தேதி (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் மேற்கொண்டிருந்த சிறப்புரை பயணத்தின்போது கலிஃபோர்னியாவில் அவர் மறைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
அவரது மறைவுக்கு பல சிங்கப்பூரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் கல்வி அமைச்சர் டெஸ்மன்ட் லீ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் இங் ஆகியோரும் அடங்குவர்.
ஜேன் குடால் கழகம் என்ற லாபநோக்கமற்ற அறநிறுவனத்தை சிங்கப்பூர் உட்பட உலகெங்கும் 35 நாடுகளில் அம்மையார் 1977முதல் நிறுவியிருக்கிறார். மனிதக் குரங்கு தொடர்பான ஆய்வில் அவர் 60 ஆண்டுகளுக்குமேல் சேவையாற்றியுள்ளார்.
சிங்கப்பூர் ஜேன் குடால் கழகத்திற்கு (JGIS) கடைசியாக 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது சிறப்புரை சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக அவர் சிங்கப்பூர் வந்திருந்தார். அந்த அறநிறுவனத்தின் சிங்கப்பூர் கிளைத் தலைவர் டாக்டர் அன்டி ஆங், ஏக்கர்ஸ் என்ற உள்ளூர் விலங்குநல அமைப்பின் தலைவரான திரு இங் ஆகியோர், திருவாட்டி ஜேன் வழங்கிய ஊக்கமும் செயலாக்கமும் அவரவர் சேவைகளில் மேலும் சிறந்துவிளங்க வழிகாட்டியாக அமைந்தன என்று அம்மையார் குறித்த சமூக ஊடக இரங்கல் செய்தியில் தெரிவித்தனர்.
டாக்டர் ஜேனை கல்வி அமைச்சர் லீ, 2015ம் ஆண்டில் முதன்முதலாக சிங்கப்பூரில் தேசிய வளர்ச்சி அமைச்சராக இருந்தபோது சந்தித்ததாகத் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
சுற்றுப்புற சூழல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவாட்டி ஜேன் அப்போது உரையாற்ற வந்திருந்தார். இயற்கை, விலங்கினம், சுற்றச்சூழல் ஆகியவற்றை பரிவுடன் ஏற்றுக்கொள்வதன் அவசியத்தை இளையர்கள் மேற்கொள்ள அவரது உரைகள் பெரிதும் உதவின என்றார் அமைச்சர். நமது நாட்டின் பல்லுயிர்ச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை அவர் ஊக்குவித்தார் என்றும் திரு லீ பதிவிட்டார்.
உலகின் இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தை வாழ்நாள் முழுதும் தனி ஒருவராகத் திரும்பிப் பார்க்க வைத்தவர் டாக்டர் ஜேன் குடால் என்று பல சிங்கப்பூரர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.