கோலாலம்பூர் முதல் சிங்கப்பூர் சாங்கி வரையிலான வழித்தடம் இரண்டாவது பரபரப்பான அனைத்துலக விமானப் பாதை என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
2023ஆம் ஆண்டு முதலிடத்தைப் பெற்ற இந்த வழித்தடம், கடந்த ஆண்டு நான்காவது இடத்துக்கு இறங்கியது.
பயணத் தரவு வழங்குநரான ஓஏஜி (OAG) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கோலாலம்பூர்-சிங்கப்பூர் வழித்தடம், மே 2025ல் 483,848 இருக்கைகளைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ஐந்து விழுக்காடு அதிகமாகும்.
கெய்ரோவிலிருந்து ஜெட்டா செல்லும் வழித்தடம் மூன்று விழுக்காடு வித்தியாசத்துடன் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது ஹாங்காங்-தைப்பே வழித்தடம். இது மே 2025ல் 557,806 இருக்கைகளைப் பதிவு செய்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட மூன்று விழுக்காடு அதிகமாகும்.
கோலாலம்பூர்-சிங்கப்பூர் வழித்தடத்தைத் தவிர, ஜகார்த்தா - சிங்கப்பூர் சாங்கி வழித்தடமும் மே 2025ல் முதல் 10 இடங்களுக்குள் வந்தது. இது 2024 தரவரிசையில் எட்டாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்துக்கு உயர்ந்தது.
முதல் 10 இடங்களில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும், ஜகார்த்தா-சிங்கப்பூர் மிகப்பெரிய இருக்கைகள் அதிகரிப்பைப் பெற்றது. அதன்படி, அது 27 விழுக்காடு கூடுதல் இருக்கைகளைச் சேர்த்தது.
இதற்கிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒன்பதாவது பரபரப்பான விமானப் பாதையான பேங்காக்-சிங்கப்பூர் விமானப் பாதை, முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஒரு மாதத்தில் அதிக திட்டமிடப்பட்ட விமான இருக்கைகளைக் கொண்ட வழித்தடங்கள் மிகவும் பரபரப்பான விமானப் பாதைகள் என ஓஏஜி வரையறுக்கிறது.
ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில், ஒவ்வொரு வழித்தடத்திலும் இரு திசைகளிலும் உள்ள விமானங்களுக்கான தரவு, ஓஏஜியின் அட்டவணை பகுப்பாய்விலிருந்து பெறப்படுகிறது.