இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டது

இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டது

1 mins read
b1780231-db91-45da-9396-24c5fcbaca55
கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிக்கச் செய்து தகர்க்கப்பட்ட குண்டு. - படம்: தற்காப்பு அமைச்சு

இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு ஒன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 2) அதிகாலை வெடிக்கச் செய்து பத்திரமாக தகர்க்கப்பட்டது.

250 கிலோகிராம் எடையுள்ள அந்தக் குண்டு தானா மேரா கோஸ்ட் ரோட்டில் உள்ள கட்டுமானத்தளம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.

அதனை வெடிக்கச் செய்தபோது விமான நிலையச் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை என்று சிஎன்ஏ எழுப்பிய வினாக்களுக்குப் பதிலளிக்கையில் சாங்கி விமானநிலையக் குழுமம் கூறியது.

கட்டுமானத்தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளும் உள்கட்டமைப்புகளும் நன்கு சோதிக்கப்பட்டதாகவும் பிரச்சினை எதுவும் இல்லை எனத் தெரிய வந்ததாகவும் அது குறிப்பிட்டது.

அப்புறப்படுத்தும் பணிகளின்போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் ஓடுபாதை மூடப்பட்டது.

“வெடிகுண்டு அகற்றப்பட்ட இடத்தின்மீது விமான ஓடுபாதைகள் இல்லாததால் வான்வெளிக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அதனால், விமானங்களின் செயல்பாடுகளில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை,” என சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் வான்வழிப் போக்குவரத்துச் சேவை இயக்குநர் வின்சென்ட் ஹுவா தெரிவித்தார்.

சாங்கி விமான நிலையம் முனையம் 5 கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள சாங்கி ஈஸ்ட் மேம்பாட்டுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) அதிகாலை 4.55 மணியளவில் கட்டுமானப் பணிகளின்போது போர்க்கால வெடிகுண்டு கண்டறிப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஆயுதப் படையின் வெடிபொருள் அகற்றும் குழுவினர், வெடிகுண்டை நகர்த்துவது பாதுகாப்பற்றது என்று மதிப்பிட்டனர். அதனால், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அதனை அகற்ற அவர்கள் முடிவு செய்தனர்.

குறிப்புச் சொற்கள்