தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நற்காரியங்களுக்கு சிங்கப்பூரை தேர்ந்தெடுக்கும் உலகச் செல்வந்தர்கள்

3 mins read
dc20b512-c9ce-4885-b7e8-6b49564db886
(இடமிருந்து) ரே டாலியோ, லோ டக் குவோங். (கீழ்வரிசை, இடமிருந்து) முகமட் சாலே மரிக்கான், எட்வார்டோ சாவெரின், பில்கேட்ஸ். - படங்கள்: ஜின் டே, என்டியு, கெல்வின் சிங், பி கேப்பிட்டல், பெரிதா ஹரியான்

உலகின் பெரும் செல்வந்தர்கள் தங்களுடைய அறப்பணியை விரிவுபடுத்துவதற்காக சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்க நிதி வர்த்தகரான பில்லியனர் ரே டாலியோ, இந்தோனீசிய நிலக்கரி வியாபார உலகின் மன்னர் லோ டக் குவோங், பிரேசிலில் பிறந்த ஃபேஸ்புக்கின் இணை நிறுவனர் எட்வார்டோ சாவெரின் உள்ளிட்டோர் சிங்கப்பூரில் அறக்கட்டளைகளை அமைத்துள்ளனர்.

சிறந்த நிதி நிர்வாகம், தாராளமான வரிச் சலுகைகளையும் அளிக்கும் சிங்கப்பூர் ஆசியாவின் நிதி மையமாகவும் அறப்பணிக்கு சிறந்த இடமாகவும் விளங்குவதை பெரும் செல்வந்தர்களின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.

இம்மாதம் 5ஆம் தேதி உலகின் பெரும் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான கேட்ஸ் அறக்கட்டளை அதன் அறப்பணி அமைப்பின் கிளையை சிங்கப்பூரில் திறக்கப்போவதாக அறிவித்தது.

2000ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸ், அவரது முன்னாள் மனைவி மெலிண்டா ஆகியோரால் தொடங்கப்பட்ட அறக்கட்டளை உலகில் வறுமை, நோய், சமத்துவமின்மையை எதிர்த்து போராடுவதை நோக்கமாகக் கொண்டது.

அக்டோபரில் 70வது வயதைத் தொடும் அமெரிக்கரான கேட்ஸ், 2025ஆண்டின் ஃபோர்ப்ஸ் செல்வந்தர்களின் பட்டியலில் 13வது இடத்தைப் பிடித்துள்ளார் அவரது மொத்த மதிப்பு 108 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

சிங்கப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு குறைந்தது ஐந்து புதிய அறப்பணி அமைப்புகள் பதிவு செய்யப்பட்டதாக அறநிறுவன ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பில்லியனரான ரே டாலியோ தனது அறக்கட்டளையை சிங்கப்பூரில் 2023 ஜூனில் பதிவு செய்தார். 2023ஆம் ஆண்டின் அதன் ஆண்டு அறிக்கையின்படி டாலியோ அறக்கட்டளை 1.4 மில்லியன் டாலரை பல்வேறு உள்ளூர், வட்டார அமைப்புகளுக்கு மானியமாக வழங்கியுள்ளது. ரே டாலியோவின் மொத்த மதிப்பு 14 பில்லியன் அமெரிக்க டாலர் என்று ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது.

இலேய்ன் அண்ட் எட்வார்டோ சாவெரின் அறக்கட்டளை, 2024ல் சிங்கப்பூர் அமெரிக்கப் பள்ளிக்கு 20 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியது. இந்த அமைப்பு 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டது. எட்வார்டோ சாவெரின், அவரது மனைவி இலேய்ன் சாவெரின் இதன் இயக்குநர்கள். திரு சாவெரின், மார்க் ஸக்கர்பெர்க்குடன் சேர்ந்து ஃபேஸ்புக்கைத் தோற்றுவித்தார். உலகின் 51வது பெரும் பணக்காரரான இவர், உலகச் செல்வந்தர்களின் பட்டியலில் 51வது இடத்தில் உள்ளார். பிரேசிலில் பிறந்தவரான 43 வயது சாவெரின் சிங்கப்பூரின் நிரந்தவாசியாவார்.

சிங்கப்பூரில் பிறந்த இந்தோனீசிய தொழில் அதிபரான லோ டக் குவோங்கின் அறக்கட்டளை, 2025ஆம் ஆண்டில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு $8 மில்லியனை வாரி வழங்கியது. அவரது லோ டக் குவோங் அறக்கட்டளை சிங்கப்பூரில் 2023 பிப்ரவரியில் பதிவு செய்யப்பட்டது. கல்வியை அனைவருக்கும் எட்டச் செய்வது இந்த அறக்கட்டளையின் நோக்கமாகும்.

‘செகண்ட் சான்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனரான முஹமட் சாலே மரிக்கான், தேர்ந்தெடுக்கப்பட்ட அறப்பணிகளுக்கு 100 மில்லியன் வரை நன்கொடை வழங்க விரும்புகிறார். இவரது சாலே மரிக்கான் அறக்கட்டளை 2022 ஜூனில் பதிவு செய்யப்பட்டது. 75 வயது சிங்கப்பூரரான சாலேயின் அறக்கட்டளை 2024 ஏப்ரலில் முடிந்த நிதியாண்டு வரையில் பல்வேறு சமூக அமைப்புகளுக்கு 556,000 வெள்ளி வரை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. குறிப்பாக வசதியில்லாத பிள்ளைகளின் மேற்படிப்புக்கு இந்த அறக்கட்டளை நிதியுதவி அளித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்