சிங்கப்பூரில் கட்டுமானப் பணிகளில் சேருவதற்காக பங்ளாதேஷைச் சேர்ந்த பல ஊழியர்கள் இடைத்தரகர்களுக்குத் தங்களது ஈராண்டுச் சம்பளத்தை ஈடாகக் கொடுக்கும் நிலை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. இதனால் அவர்கள் பெரும் கடன்சுமையில் சிங்கப்பூருக்கு வருகின்றனர்.
சமுதாயத்தில் நிலவும் சவால்களை எதிர்கொள்ள கொடையாளர்களை ஒன்றிணைக்கும் கட்டமைப்பாக விளங்கும் ‘ஏஷியா ஃபிலாந்திரப்பி சர்க்கள்’ (ஏபிசி), சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரும்பியது.
இதற்காக, அனைத்துலக மேம்பாட்டு அமைப்பு ஒன்றுடனும் சமூக நிறுவனம் ஒன்றுடனும் சிங்கப்பூர் பங்காளித்துவ அமைப்பு ஒன்றுடனும் இணைந்து, பங்ளாதேஷ் ஊழியர்களை நேரடியாகப் பணியமர்த்தும் திட்டத்தை ஏபிசி தொடங்கியது.
இதன்மூலம் ஊழியர்களைத் தேர்வுசெய்து, பயிற்சியளித்து, இங்குள்ள முதலாளிகளிடம் அவை நேரடியாகப் பணியமர்த்துகின்றன. ஊழியர் ஒருவரைப் பணியமர்த்த இடைத்தரகர்கள் பெறும் $12,000 முதல் $15,000 வரையிலான கட்டணத்தை இந்த அணுகுமுறை முற்றிலுமாகத் தவிர்க்கிறது.
இத்திட்டத்தின்கீழ், ஊழியர்கள் தங்களது பயிற்சி, மருத்துவப் பரிசோதனை, விமானப் பயணச்சீட்டு, இதரச் செலவுகளுக்காக $5,000க்கும் குறைவாகவே செலுத்த வேண்டியிருக்கும் என்று ஏபிசி அமைப்பின் தலைவர் லாரன்ஸ் லியென், 55, தெரிவித்தார்.
“ஊழியர்கள் கடும் கடன்சுமையில் இருக்கும்போது, முதலாளிகளுக்கு அவர்கள்மீது அதிக அதிகாரம் கிடைத்து விடுகிறது. முதலாளிகள் நியாயமில்லாமல் எதைச் செய்ய சொன்னாலும், தங்களின் சூழ்நிலை காரணமாக ஊழியர்கள் அதைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்,” என்று திரு லியென் கூறினார்.
2023 பிற்பகுதியில் இந்த நேரடிப் பணியமர்த்தல் முறை தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 150க்கும் மேற்பட்ட பங்ளாதேஷ் ஊழியர்களுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்துள்ளது. இன்னும் பலருக்குப் பயனளிக்கும் வகையில் இந்த அணுகுமுறையை விரிவுபடுத்துவதே தங்களின் நோக்கம் என்றும் திரு லியென் குறிப்பிட்டார்.
இத்திட்டம், ஏபிசி அமைப்பின் செயல்பாட்டையும் கொடைத்திறன் குறித்து திரு லியென் கொண்டுள்ள பார்வையையும் வெளிப்படுத்துகிறது. கொடைத்தன்மை என்பது பணத்தை வாரிக் கொடுப்பது மட்டுமன்று. சமூகப் பிரச்சினைகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, மற்றவர்களுடன் இணைந்து அவற்றுக்குத் தீர்வுகாண்பதே கொடைத்திறன் பற்றிய அவரது கண்ணோட்டமாகும்.
தொடர்புடைய செய்திகள்
கொடைத்தன்மையில் உலகின் ஆகச் செல்வாக்குமிக்க 100 பேரில் ஒருவராக ‘டைம்’ இதழால் திரு லியென் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். மே 25ஆம் தேதி வெளியான அந்த இதழின் 2026 பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே சிங்கப்பூரர் அவர்.

