கரியமிலவாயுவை உறிஞ்சி அகற்றும் கடலின் ஆற்றலை அதிகரிக்க சிங்கப்பூர் உருவாக்கி வரும் உலகின் ஆகப்பெரிய ஆலை அடுத்த ஆண்டு முதலாம் காலாண்டில் செயல்படத் தொடங்கும்.
அந்த ஆலையை நிறுவுவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் அடுத்த (செப்டம்பர்) மாத இறுதியில் தொடங்கும்.
‘ஈக்குவாட்டிக்-1’ என்னும் அந்த செயல்விளக்க ஆலை துவாசில் அமைகிறது.
சிங்கப்பூரின் தேசிய தண்ணீர் வாரியமான பியூபியும் அமெரிக்காவின் புத்தொழில் நிறுவனமான ‘ஈக்வாட்டிக்’கும் இணைந்து அதனை உருவாக்கும்.
ஈக்குவாட்டிக் நிறுவனம் கடல் சார்ந்த கரியமிலவாயுவை நீக்கும் தொழில்நுட்பத்தை ஏற்கெனவே உருவாக்கி உள்ளது.
கரைந்த கரியமிலவாயுவை நீக்குவதன் மூலம் கடல்நீரின் வேதிப்பொருளை மாற்றும் ஆற்றல் கொண்டது அந்தத் தொழில்நுட்பம்.
பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் சிங்கப்பூரின் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
US$20 மில்லியன் (S$27 மில்லியன்) செலவில் உருவாகும் அந்த ஆலை, பியூபியின் நீர்ச் சுத்திகரிப்பு நடைமுறையில் பின்பற்றப்படும் கரிமநீக்கத்திற்கு உதவும் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
புவியின் 70 விழுக்காடாக இருக்கும் பெருங்கடல் வட்டாரம் கரியமிலவாயுவைச் சேமிக்கும் பகுதியாகக் கருதப்படுகிறது. மனிதர்களின் நடவடிக்கை காரணமாக வெளியேற்றப்படும் 30 விழுக்காட்டு கரியமில வாயுவை அது உறிஞ்சுகிறது.
கடல்துறை கரியமிலவாயுவை நீக்கும் தொழில்நுட்பம், பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் கடலின் ஆற்றலைப் பெருக்கும் நோக்கம் கொண்டது. மேலும், அந்தத் தொழில்நுட்பம் முதலீட்டாளர்களைக் கவர்ந்து வருகிறது.
தெமாசெக் டிரஸ்ட்டின் முதலீட்டுப் பிரிவான C3H நிறுவனம் கிபோ இன்வெஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து ஈக்குவாட்டிக்கிற்காக US$11.6 மில்லியன் (S$14.9 மில்லியன்) நிதித் திரட்டில் இணைந்து ஈடுபடப்போவதாக ஆகஸ்ட் 12ஆம் தேதி அறிவித்தது.
இந்த முதலீடு ஈக்குவாட்டிக் நிறுவனத்தின் முதல் வர்த்தகக்கூடத்திற்கான பொறியியல் விரிவாக்கத்திற்கு உதவும் என்று C3H தெரிவித்துள்ளது.
அத்துடன் ஈக்குவாட்டிக் உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தின் வர்த்தகமயம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் அது கைகொடுக்கும் எனவும் C3H தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
அருகில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையில் இருந்து கடல்நீரை எடுக்கும் சிங்கப்பூர் ஆலை, தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 1 டன் கரியமில வாயுவை அகற்றக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கும் என்று பியூபி தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஆலை முழுமையாகச் செயல்படத் தொடங்கியதும் நாள் ஒன்றுக்கு 10 டன் கரியமில வாயுவை அகற்றும் தன்மையை அது பெற்றிருக்கும் என்றது அந்த அமைப்பு.
பியூபி நிர்வகிக்கும் இரண்டு சிறிய ஆலைகள் கரியமிலவாயுவை நீக்குவதில் திறம்படச் செயல்பட்டதைத் தொடர்ந்து ஆகப்பெரிய ஆலையைக் கட்டுவதற்கான திட்டம் உதயமானது.
முன்னதாக, ஈக்குவாட்டிக்-1 ஆலை 2024 இறுதிக் காலாண்டில் பணிகளைத் தொடங்கி 2025ஆம் ஆண்டு முழுமையாகச் செயல்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், ஆலையின் வெவ்வேறு கருவிகளை வடிவமைப்பதில் இறுதி முடிவு எடுக்கக் கூடுதல் காலம் தேவைப்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாக பியூபி கூறியது