உலகின் ஆகப் பாதுகாப்பான மலிவுக் கட்டண விமான நிறுவனங்கள்: மூன்றாவது இடத்தில் ஸ்கூட்

2 mins read
ef387abd-a8cd-4fa2-8581-eab17566fcdd
2025 டிசம்பர் 19ஆம் தேதி சாங்கி விமான நிலையம் முனையம் 1ல் நிறுத்திவைக்கப்பட்ட ஸ்கூட் விமானங்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு (எஸ்ஐஏ) சொந்தமான மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட், 2026ல் உலகின் ஆகப் பாதுகாப்பான மலிவுக் கட்டண விமான நிறுவனங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. விமானப் பாதுகாப்பு இணையப்பக்கமான AirlineRatings.com இத்தகவலை வெளியிட்டுள்ளது.

ஹாங்காங்கின் எச்கே எக்ஸ்பிரஸ் முதலிடத்தையும் ஜெட்ஸ்டார் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. கடைசியாக 2023ல், உலகின் ஆகப் பாதுகாப்பான 25 மலிவுக் கட்டண விமான நிறுவனங்கள் இடம்பிடித்திருந்த இப்பட்டியலில் ஸ்கூட்டும் அங்கம் வகித்திருந்தது. ஆனால், அப்போது அவை தரவரிசைப்படுத்தப்படவில்லை.

AirlineRatings.com இணையப்பக்கம், 2014 முதல் ஆண்டுதோறும் உலகின் ஆகப் பாதுகாப்பான விமான நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வந்துள்ளது. 2026 பட்டியலுக்காக 320 விமான நிறுவனங்களை அது மதிப்பீடு செய்துள்ளது. 25க்கும் குறைவான விமானங்களை இயக்கும் விமான நிறுவனங்களுக்கு இந்த மதிப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

விமான நிறுவனங்கள் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. குறிப்பாக, அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் போன்ற உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட விமானப் போக்குவரத்து அமைப்புகளின் தணிக்கைகளையும் தரநிலைகளையும் பின்பற்றுதல் உள்ளிட்ட அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன.

2026க்கான ஆகப் பாதுகாப்பான முழுச் சேவை விமான நிறுவனமாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் எட்டிஹாட் ஏர்வேஸ் பெயரிடப்பட்டுள்ளது. மாறாக, எஸ்ஐஏ ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது. 2014லிருந்து எஸ்ஐஏ ஒவ்வோர் ஆண்டும் இப்பட்டியலில் இடம்பிடித்து வந்துள்ளது. 2024ல் 13வது இடத்தையும் 2023ல் ஐந்தாம் இடத்தையும் 2022ல் நான்காம் இடத்தையும் அது பிடித்திருந்தது.

இப்பட்டியலில் இடம்பிடிக்க எஸ்ஐஏ தவறவிட்ட ஒரேயோர் ஆண்டு 2025. கடந்த 2024 மே 21ஆம் தேதி வானில் நிலவிய கடுமையான காற்றுக் கொந்தளிப்பால் எஸ்கியூ321 விமானம் பாதிக்கப்பட்டதன் காரணமாக எஸ்ஐஏவின் பாதுகாப்பு மதிப்பீட்டு மதிப்பெண்கள் பாதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்