பிடோக் நார்த் ஃபேர்பிரைஸ் பேரங்காடியிலிருந்து தாம் வாங்கி வந்து சமைத்த சால்மன் மீன் துண்டில் புழு இருந்ததாக மாது ஒருவர் கூறியதைத் தொடர்ந்து, ஃபேர்பிரைஸ் குழுமம் மன்னிப்பு கோரியுள்ளது.
ஃபேர்பிரைஸ் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியிட்ட ஓர் அறிக்கையில், இதுகுறித்து தனது விநியோகிப்பாளருடன் விசாரித்து வருவதாகத் தெரிவித்தது.
இந்தச் சம்பவம் குறித்து சிங்கப்பூர் உணவு அமைப்புக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் அதன் சொந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த உணவு அமைப்பு, இந்த விவகாரம் குறித்து தான் விசாரித்து வருவதை உறுதிப்படுத்தியது.
“உணவு பாதுகாப்பு என்பது கூட்டுப் பொறுப்பாகும்,” என்று அவ்வமைப்பு கூறியது.
“உணவு அமைப்பு சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து அமல்படுத்தினாலும், உணவு விற்பனையாளர்கள் நல்ல உணவு சுகாதாரத்தையும் தயாரிப்பு நடைமுறைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் பங்காற்ற வேண்டும்,” என்று அது எடுத்துரைத்தது.
“எங்கள் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் பயத்திற்கும் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். அவரது கவலைகளைப் போக்க அவரைத் தொடர்புகொண்டுள்ளோம்,” என்று ஃபேர்பிரைஸ் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
உணவு பாதுகாப்பையும் தரத்தையும் ஃபேர்பிரைஸ் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் விற்கப்படும் உணவுப் பொருள் வீட்டில் முறையாகக் கையாளப்பட்டுச் சமைக்கப்பட்டால், அது உண்பதற்குப் பாதுகாப்பானது என்றும் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.