உடற்குறையுள்ளோரின் வேலை கிடைக்காத கவலை

உடற்குறையுள்ளோரின் வேலை கிடைக்காத கவலை

3 mins read
f1d850a6-5d27-41f3-ab18-77514b2350fe
உடற்குறையுள்ள சிண்டி சோ, 24, சக்கர நாற்காலியில் காலத்தை ஓட்டி வருகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எலும்பு வளர்ச்சியைப் பாதிக்கும் ‘மார்கியோ சிண்ட்ரோம்’ என்ற மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்ட 24 வயது சிண்டி சோ, 13 வயதிலிருந்து சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.

இந்த அரிய நோய் அவரது தண்டுவடம், கை, கால்களைப் பலவீனப்படுத்தினாலும் அவரது அறிவுத்திறனை அது பாதிக்கவில்லை.

மின்னிலக்க வணிகத்தில் பட்டயக் கல்வி முடித்த சோ, வேலை தேடியபோது தமக்கு வேலை கிடைக்குமா என்ற சந்தேகத்தால் நேர்காணல்களில் இருந்து பின்வாங்கினார். மதிப்பீட்டுத் தேர்வுகளுக்குக் கூடுதல் நேரம் போன்ற சில சலுகைகளைக் கேட்கவும் அவர் தயங்கினார். தற்போது ஊடக நிறுவனம் ஒன்றில் நிர்வாக உதவியாளராக அவர் பணியாற்றி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

கடந்த ஜூன் மாதம் உடற்குறையுள்ளோர் உள்ள குடும்பங்களுக்கான உத்தரவாதப் பணிக்குழு நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்றவர்களில் சோவும் ஒருவர்.

கடந்த 2025 டிசம்பரில் அமைக்கப்பட்ட இந்தப் பணிக்குழு, உடற்குறையுள்ளோருக்கான ஆதரவை அவர்களது வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்து வருகிறது.

உடற்குறையுள்ளோர், அவர்களின் குடும்பத்தினர், முதலாளிகள் எனப் பல தரப்பினரின் கருத்துகளை அறிய இதுவரை 31 கலந்துரையாடல்கள், சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

இன்னும் சில மாதங்களில் இதற்கான பரிந்துரை அறிக்கை வெளியிடப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் கோ பெய் மிங் ஜூலை 10 அன்று தெரிவித்தார்.

உடற்குறையுள்ளோர் வேலைவாய்ப்பில் இன்னும் நிச்சயமற்ற சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் கோ, அனைவரையும் உள்ளடக்கிய வேலைவாய்ப்பு முறைக்குக் கூடுதல் ஆதரவை குடும்பங்கள் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சிங்கப்பூரில் தற்போது உடற்குறையுள்ளோருக்கான சராசரி வேலைவாய்ப்பு 34.7 விழுக்காடாக உள்ளது. இதனை 2030க்குள் 40 விழுக்காடாக உயர்த்துவதே இலக்காகும்.

சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளைப் பராமரிப்போருக்கு ஆதரவளிக்கும் ‘கேரிங்எஸ்ஜி’ அறப்பணி அமைப்பின் எட்வர்ட் சான், “சில பெற்றோர் நிறுவனங்களை அணுகி, என் பிள்ளைக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள், சம்பளம் கூடத் தேவையில்லை, அவர் வேலைக்குச் தகுதியானவரா என்று மட்டும் பாருங்கள் என கெஞ்சும் நிலை உள்ளது,” என்றார்.

வேலை கிடைத்தாலும் அவர்கள் தொடர்ந்து வேலையில் நீடிப்பது பெரும் சவாலாக உள்ளது.

உடற்குறையுள்ளோரை வேலைக்கு எடுப்பதிலும், பயிற்சி அளிப்பதிலும் பணியிடங்களில் முறையான தரக்கட்டுப்பாடுகள் இல்லை என்று பராமரிப்பாளர்கள் கருதுகின்றனர்.

பிரபலமான பலகாரத் தயாரிப்பு நிறுவனமான ‘கிம் சூ குவே சாங்’ தற்போது அதன் தொழிற்சாலை, கிளைகளில் அறிவுத்திறன் குறைபாடுடைய 18 பேரை பகுதிநேரப் பணிகளில் அமர்த்தியுள்ளது.

‘எஸ்ஜி எனேபிள்’ , ‘டிராம்போலீன்’ அமைப்புகளின் வேலைவாய்ப்புப் பயிற்சியாளர்கள் அளித்த ஆதரவே நிறுவனத்தின் சூழலை மாற்ற உதவியதாக அதன் நிர்வாகம் தெரிவித்தது.

அதேபோல், ‘ரென் சி’ மருத்துவமனையில் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட 17 உடற்குறையுள்ளோரை தூய்மைப் பணி, சலவை, தோட்டப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் பட விளக்கக் குறிப்புகளும், மன அழுத்தத்திற்கு உள்ளானால் ஓய்வெடுக்க தனி இடங்களும் மருத்துவமனையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

“உடல் ஊனமுற்றோர் மிகவும் அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் வேலைக்கு வர எப்போதும் ஆர்வமாக இருக்கிறார்கள்,” என்று ரென் சி மருத்துவமனையின் மனிதவள மேம்பாட்டு இயக்குநரான நூர்யாஸ்மின் ஹன்னா சுலைமான் கூறினார்.

இந்த நிலையில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், உடற்குறையுள்ளோரை அமர்த்துவதற்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்
உடற்குறையுள்ளோர்வேலைவாய்ப்புகுடும்பம்அமைச்சு

தொடர்புடைய செய்திகள்