சிங்கப்பூரில் மோசமான புகைமூட்டப் பிரச்சினை தொடர்ந்தால் அது, பயனீட்டாளர்கள் செலவிடுவதையும் வர்த்தக நடவடிக்கைகளையும் பாதிக்கக்கூடும்.
அதேவேளை, நாட்டின் ஒட்டுமொத்த பொருளியல் வளர்ச்சியில் அதன் தாக்கம் குறைவாகத்தான் இருக்கும் என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஏற்ற இறக்கமான தாக்கம்
பொருளியல்ரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர் வருகை குறைவது, உற்பத்தி இழப்பு ஏற்படுவது போன்ற பிரச்சினைகளைச் சில வர்த்தகங்கள் எதிர்நோக்கக்கூடும். அதேநேரம் அதிகமானோர் உள்ளரங்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது, காற்று சுத்திகரிப்புச் சாதனங்களுக்கும் முகக்கவசங்களுக்குமான தேவை அதிகரிப்பது ஆகியவை மற்ற சில வர்த்தகங்களுக்குச் சாதகமாக அமையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வல்லுநர்களின் கருத்து
புகைமூட்டத்தால் பொருளியலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகைப்படுத்தப்படக்கூடாது என்றும் பாதிப்பு பெரும்பாலும் குறைவாகத்தான் இருக்கும் என்றும் மேபேங்க் வங்கியைச் சேர்ந்த பொருளியல் வல்லுநர் பிரையன் லீ, பிஸ்னஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். மனிதர்களிடையே தொடர்பு அவசியம் தேவைப்படும் துறைகள், சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகச்சிறிய பங்கை மட்டுமே வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஆர்எச்பி வங்கிக் குழுமத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநரான பர்னாபாஸ் கான், புகைமூட்டப் பிரச்சினை அதிக காலம் நீடிக்காவிட்டால் பொருளியலில் ஏற்படக்கூடிய பாதிப்பு பெரும்பாலும் குறைவாகவே இருக்கும் என்று கூறுகிறார். எனினும், பிரச்சினை அதிக காலம் நீடித்தால் சேவைத் துறை நடவடிக்கைகள், வர்த்தகச் செயல்பாட்டுச் செலவுகள் உள்ளிட்டவை பாதிக்கப்படக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
11 ஆண்டுகளாகக் காணப்படாத நிலை
சிங்கப்பூரின் காற்றின் தரத்தைக் குறிக்கும் பிஎஸ்ஐ குறியீடு தொடர்ந்து 12 நாள்களாக ஆரோக்கியமற்ற நிலையில் இருந்துவருகிறது. 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தனை நாள்களுக்குக் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
2015ல் காற்றின் தரம் தொடர்ந்து 14 நாள்களாக ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது.
