தேசிய தினப் பதாகைக்கு அருகே மறைந்த முன்னோர்க்கான வழிபாடு

தேசிய தினப் பதாகைக்கு அருகே மறைந்த முன்னோர்க்கான வழிபாடு

2 mins read
a5832444-a960-4d48-a9e5-aca3fab5a9dc
சைனாடவுனில் உள்ள ‘புத்தா டூத் ரெலிக்’ பெளத்த ஆலயத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட வழிபாட்டு பீடம். - படம்: கார்டன் லியூ/ஃபேஸ்புக்
Google News Preferred Icon

ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்களைக் கொண்ட தேசிய தினப் பதாகைக்கு அருகே, மறைந்த முன்னோர்க்கான வழிபாட்டுப் பீடம் அமைக்கப்பட்டதற்கு இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அந்தப் பீடம் அமைக்கப்பட்ட இடத்தைக் குறிப்பிட்டு, அது ‘பொருத்தமற்றது’ எனப் பல இணையவாசிகள் விமர்சித்தனர்.

சைனாடவுனில் உள்ள ‘புத்தா டூத் ரெலிக்’ பெளத்த ஆலயத்துக்கு வெளியே இந்த வழிபாட்டுப் பீடம் தொடர்பான படங்கள், சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) ‘அம்பிரேஜ் சிங்கப்பூர்’ (Umbrage Singapore) எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டன.

ஜாலான் புசார் நாடாளுமன்ற உறுப்பினர்களான வான் ரிசால், ஜோசஃபின் டியோ, டெனிஸ் புவா லே பெங், ஷான் லோ ஆகியோரின் உருவப் படங்கள் அடங்கிய தேசிய தினப் பதாகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த அந்த பீடத்தைச் சுற்றி, பல வழிபாட்டாளர்கள் கூடியிருந்ததை அப்படங்கள் காட்டியதாகக் கூறப்பட்டது.

சிவப்புத் துணியால் மூடப்பட்ட தற்காலிக மேசைகளைக் கொண்டு அது அமைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. அவ்விடத்தில், பொதுமக்கள் மண்டியிட்டு வழிபாடு செய்யும் பிற படங்களும் இணையத்தில் பரவின.

அந்தப் பகுதிக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர் ஒருவரால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது என்றும் அருகிலுள்ள குடியிருப்பாளர்களும் ஊழியர்களும் அங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம் என்றும் காப்பிக் கடையின் மேலாளரான 75 வயது ஜோ, சீன நாளிதழான சாவ் பாவ்விடம் தெரிவித்தார்.

மேலும், “அவ்விடத்தில் தவறேதும் இருப்பதாக யாரும் நினைக்கவில்லை. நாங்கள் அதை ஒரு திறந்தவெளி இடம் என மட்டுமே நினைத்தோம்,” என்று அவர் கூறினார்.

இணையத்தில் படங்கள் பதிவிடப்பட்ட பிறகே அது பொருத்தமற்றதாக நாங்கள் உணர்ந்தோம் என்றார் அவர்.

இந்த வழிபாட்டுப் பீடத்தை அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை.

குறிப்புச் சொற்கள்