அரசியல் பிரிவுகளைக் கடந்து செல்லும் குடும்ப உறவுகள் சிங்கப்பூரில் அறியப்படாதவை அல்ல.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங், பாரிசான் சோஷலிஸ் கட்சியின் அரசியல்வாதியான ஓங் லியான் டெங்கின் மகன் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு லியான் டெங், 1966ல் தனது பதவியிலிருந்து விலகினார்.
மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியின் தந்தை டோமினிக் புதுச்சேரி, முன்னாள் மக்கள் செயல் கட்சி உறுப்பினராக இருந்து கட்சியை விட்டு வெளியேறி, பாரிசான் சோஷலிஸ் கட்சியில் சேர்ந்தார்.
பாட்டாளிக் கட்சி உறுப்பினர் சித்தி ஆலியா அப்துல் ரஹீம் மாத்தார் (ஆலியா மாத்தார்) தனது மாமா அகம்மது முகமது மாத்தார் (அகம்மது மாத்தார்) உடன் இருக்கும் புகைப்படத்தை செப்டம்பர் 14 அன்று பகிர்ந்து கொண்டபோது, அத்தகைய மற்றொரு தொடர்பு வெளிப்பட்டது.
அகம்மது மாத்தார் முன்னாள் மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஓர் அமைச்சராகவும் இருந்தார். 1990களில் சுற்றுப்புற அமைச்சராகவும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகவும் பணியாற்றினார்.
மெண்டாக்கி அமைப்பைத் தோற்றுவித்து அதன் தலைவராக இருந்த காலம் உட்பட தமது அனுபவங்களைத் தமது மாமா தன்னிடம் விவரித்ததாக ஆலியா மாத்தார் பகிர்ந்துகொண்டார்.
“வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக நாங்கள் இருவரும் இருப்பதால், இதை வெளியிடுவதற்கு முன்பு நான் அவரிடம் அனுமதி கேட்டேன். அதற்கு அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்,” என்றார் ஆலியா.
“அவருடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். வரும் ஆண்டுகளில் அதைத் தொடர்ந்து செய்யத் திட்டமிட்டுள்ளேன்,” என்றும் ஆலியா குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தமது மாமா அண்மையில் 86வது பிறந்தநாளைக் கொண்டாடியதாகவும் அவருக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்க வாழ்த்தியதாகவும் ஆலியா மேலும் கூறினார்.
ஆலியா மாத்தார், 2025 பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆலியா, பாட்டாளிக் கட்சியின் தொண்டூழியராக ஓராண்டு காலம் இருந்ததாக அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் ஒரு வழக்கறிஞராக ஏறத்தாழ இருபது ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ளார்.
அவர் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார்.
புதிதாக அறிவிக்கப்பட்ட பொங்கோல் குழுத் தொகுதியில், ஹர்பிரீத் சிங், அலெக்சிஸ் டாங், ஜாக்சன் ஆவ், ஆலியா மாத்தார் ஆதியோர் பாட்டாளிக் கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார்கள்.
அவர்கள் துணைப் பிரதமர் கான் கிம் யோங், ஜனில் புதுச்சேரி, சுன் ஷுவெலிங், இயோ வான் லிங் ஆகியோரைக் கொண்ட அணியை எதிர்கொண்டனர். இறுதியில் 44.8 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தனர்.