நாடாளுமன்றக் குழுவிடம் பொய் சொன்னது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங்கிற்கு எதிரான வழக்கு விசாரணை தொடங்க இருக்கிறது.
இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும் என்று 48 வயது திரு சிங் அண்மையில் மனு செய்திருந்தார்.
இதை நீதிபதி ஹூ ஷியூ பெங் செப்டம்பர் 9ஆம் தேதியன்று நிராகரித்தார்.
இந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று திரு சிங் முன்வைத்த வாதத்தை அவர் ஏற்கவில்லை.
பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் தொடர்பான சர்ச்சை குறித்து 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றக் குழுவிடம் திரு சிங் பொய் கூறியதாக அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பான 16 நாள் வழக்கு விசாரணை அக்டோபர் 14ஆம் தேதிக்கும் நவம்பர் 13ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதன்மை மாவட்ட நீதிபதி லியூக் டான் தலைமையின்கீழ் வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தொடர்பான வழக்கு விசாரணையில் பொதுமக்கள் அதிக ஆர்வம் கொண்டிருப்பதால் அதை உயர் நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று அரசாங்க வழக்கறிஞர்கள் மனுச் செய்ததை ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று திரு சிங்கின் வழக்கறிஞர் திரு ஆண்ட்ரே ஜுமபோய் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
அதே போல திரு சிங் தொடர்பான வழக்கு விசாரணையையும் உயர் நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
ஆனால், “இவ்விரு வழக்குளையும் ஒப்பிட முடியாது என்றும் அவை வெவ்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் என்றும் துணைத் தலைமைச் சட்ட அதிகாரி ஆங் செங் ஹோக் தெரிவித்தார்.

