தேர்தல் தொகுதி எல்லை மாற்றங்களின் நியாயத்தன்மை குறித்து பிரித்தம் சிங் கேள்வி

2 mins read
a13489e6-bb7c-4f34-9562-a015520d6d0e
பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் புதிய தேர்தல் தொகுதி எல்லைகளின் நியாயத்தன்மை குறித்து பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.

தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் (EBRC) அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்பட்ட பின்னர் திரு சிங் முதல்முறை தமது கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தமது ஃபேஸ்புக்கில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

தொகுதி எல்லைகளின் மாற்றங்களைக் குறிப்பிட்ட அவர், “இது சிங்கப்பூரில் அண்மைக் காலத்தில் மிகவும் தீவிரமாக மாற்றியமைக்கப்பட்ட தேர்தல் தொகுதி எல்லைகளில் ஒன்று,” என்றார்.

இந்தத் திருத்தங்களுக்கு மக்கள்தொகைப் பெருக்கம் காரணம் என்று சொல்லப்படுவதில் பெரும்பாலான அரசியல் பார்வையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கவில்லை என்றும் திரு சிங் கூறியுள்ளார்.

“மசெக அரசாங்கம் மேற்கொண்ட அரசியல் எல்லை மாற்ற நடைமுறையின் நியாயத்தன்மை குறித்து பொதுமக்களில் சிலர், குறிப்பாக இளம் சிங்கப்பூரர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

“எல்லைகள் அவசியம். இருப்பினும் மாற்றங்களை நியாயப்படுத்த சொல்லப்படும் காரணங்கள்தான் இப்போது அதிகம் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது,” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்

சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நெருங்குவதையொட்டி, பிரதமர் வகுத்த விதிமுறைகளின் அடிப்படையில் தேர்தல் தொகுதி எல்லைகளை மறுஆய்வுக் குழு தீர்மானித்தது.

தற்போது உள்ள 31 தொகுதிகளில் 22ல் தொகுதி எல்லைகளை மாற்றி அமைக்க அந்தக் குழு பரிந்துரைத்து உள்ளது.

தொகுதி எல்லைகள் மாற்றப்படுவதற்கான முடிவுகள் குறித்து அந்தக் குழு கடந்த பல ஆண்டுகளாக விளக்கம் எதுவும் தரவில்லை. ஆயினும், இவ்வாண்டு அது விளக்கம் அளித்தது.

குறிப்பிட்ட சில பகுதிகளில் எல்லைகளை மாற்றி அமைக்க மக்கள்தொகையில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கிய காரணம் என்று குழு தமது விளக்கத்தில் குறிப்பிட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்