தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரித்தம் சிங் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வார்: பிரதமர் வோங்

2 mins read
3eefbf6a-0fda-4f72-a2f8-2fa4df49ede5
அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி வலிமைமிக்க வேட்பாளர்களைக் களமிறக்கி கடுமையாகப் போட்டியிட்டதாக பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு பிரித்தம் சிங், எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வார் என்றார் அவர். - படம்: ஃபேஸ்புக்/லாரன்ஸ் வோங்

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வார் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் அதற்கான ஊழியர்களும் வளங்களும் வழங்கப்படும் என்றார் திரு வோங்.

இதுகுறித்து திரு சிங்கிடம் பேசிவிட்டதாக அவர் கூறினார்.

அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி வலிமைமிக்க வேட்பாளர்களைக் களமிறக்கி கடுமையாகப் போட்டியிட்டதாகப் பிரதமர் வோங் தெரிவித்தார்.

அல்ஜுனிட் குழுத் தொகுதி, செங்காங் குழுத் தொகுதி, ஹவ்காங் தனித்தொகுதி ஆகியவற்றைப் பாட்டாளிக் கட்சி தக்கவைத்துக்கொண்டது.

ஜாலான் காயு தனித்தொகுதியிலும் தெம்பனிஸ் குழுத் தொகுதியிலும் அக்கட்சி நூலிழையில் தோல்வி அடைந்தது.

தேர்தலில் தோல்வி அடைந்த மற்ற வேட்பாளர்களைவிட இவ்விரு தொகுதிகளில் தோற்ற பாட்டாளிக் கட்சி வேட்பாளர்கள் ஆக அதிக வாக்குகளைப் பெற்றனர்.

தோல்வி அடைந்த வேட்பாளர்களில் ஆக அதிக வாக்குகள் பெறும் இரண்டு பேருக்குத் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வாய்ப்பு வழங்கப்படும்.

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்க இம்முறை ஜாலான் காயு தனித்தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளருக்கும் தெம்பனிஸ் குழுத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

எனவே, நாடாளுமன்றத்தில் கூடுதலாக இரண்டு பாட்டாளிக் கட்சியினர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது.

பாட்டாளிக் கட்சி போட்டியிட்டுத் தோல்வி அடைந்த ஐந்து தொகுதிகளில் அக்கட்சி 40 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

“நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்,” என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவராகத் திரு சிங்கை அப்போதைய பிரதமர் லீ சியன் லூங் நியமித்தார். அத்தேர்தலில் பாட்டாளிக் கட்சி அதன் இரண்டாவது குழுத் தொகுதியைக் (செங்காங் குழுத் தொகுதி) கைப்பற்றியது.

நாடாளுமன்றத்தில் கொள்கைகள், மசோதாக்கள் போன்றவை தொடர்பான விவாதங்கள் எழும்போது மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலைமை தாங்குவது எதிர்க்கட்சித் தலைவரின் கடமையாகும்.

அரசாங்கத்தின் நிலைப்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் ஆராயும் பணிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தலைமை தாங்கி அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்ய வேண்டும்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத் தொகுதியில் திரு சிங் போட்டியிட்டு வென்றார்.

அத்தொகுதியில் போட்டியிட்ட பாட்டாளிக் கட்சிக் குழு 59.68 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வாகை சூடியது.

குறிப்புச் சொற்கள்