தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசுத் தரப்பு சாட்சியாக சாட்சியம் அளிக்கவிருக்கும் லோ தியா கியாங்

1 mins read
04e9b449-dd31-4651-bd89-bef0c2be63b8
திரு லோ தியா கியாங் (இடம்), திரு பிரித்தம் சிங். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் தொடர்பான வழக்கு விசாரணையில் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங் அரசுத் தரப்பு சாட்சியாக சாட்சியம் அளிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து திரு லோ 2018ஆம் ஆண்டில் விலகினார்.

நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் பொய்யுரைத்தது தொடர்பாக திரு சிங்கிற்கு எதிரான வழக்கு விசாரணை அக்டோபர் 14ஆம் தேதியன்று தொடங்கியது.

இதில் அரசுத் தரப்பு சாட்சிகளாக ஐவர் சாட்சியம் அளிக்க இருக்கின்றனர்.

இவர்களில் திரு லோவுடன், முன்னாள் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானும் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரும் அடங்குவர்.

2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதியன்று திரு லோ, திரு சிங், பாட்டாளிக் கட்சித் தலைவர் திருவாட்டி சில்வியா லிம் ஆகியோர் சந்தித்துப் பேசியதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ரயீசா கான் பொய்யுரைத்தது பற்றி அந்தச் சந்திப்பின்போது திரு லோவிடம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பொய்யுரைத்ததாக 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதியன்று ரயீசா கான் ஒப்புக்கொண்டதற்கு முன்பு இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

செய்த தவற்றை ரயீசா கான் உடனடியாக நாடாளுமன்றத்தில் ஒப்புகொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரு சிங்கிடமும் திருவாட்டி லிம்மிடம் திரு லோ கூறியதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்