சிங்கப்பூரையும் சிங்கப்பூரர்களையும் பிரதிநிதிக்கக்கூடிய வேட்பாளர்களைத் தேர்தலில் முன்னிறுத்த பாட்டாளிக் கட்சி தொடர்ந்து தன்னால் முடிந்தளவு முயன்றிருப்பதாக அதன் தலைவர் பிரித்தம் சிங் (படம்) கூறியிருக்கிறார். அது அவ்வாறே தொடர்ந்து செய்யும் என்றார் அவர்.
செய்தியாளர் கூட்டம் ஒன்றில், கட்சியின் உத்தேச வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பு முறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்து பேசினார்.
அந்தச் செய்தியாளர் கூட்டத்தில் அவர் அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா, கட்சியின் மூத்த உறுப்பினர் நிக்கோல் சியாவின் பதவி விலகலை அறிவித்தார்.
அந்த இருவரும் 2020ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தங்களுக்கு இடையே தொடங்கிய தகாத உறவைப் பற்றி கட்சியிடம் பொய் கூறி மறுத்தனர்.
வேட்பாளர்களைக் களமிறக்கும் நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அவர்களைப் பற்றிய பல விவரங்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் எதிர்த்தரப்புத் தலைவருமான திரு சிங் கூறினார். இருப்பினும், வேட்பாளர்களான பிறகு அவர்கள் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று சட்டமியற்ற முடியாது என்றும் அவர் சொன்னார்.
வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டி முறைகள் மேம்படுத்தப்படுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்தார் திரு சிங்.
ஒவ்வொரு முறையும் இத்தகைய சம்பவங்கள் நடக்கும்போது, கட்சி எவ்வாறு அதன் செயல்முறைகளை மாற்றியமைக்கலாம் என்பது பற்றிய சிந்தனை எழுவதுண்டு என்று திரு சிங் கூறினார்.
அடுத்த தேர்தலுக்குப் பாட்டாளிக் கட்சியின் உத்தி, அது எவ்வாறு பொதுமக்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் என்பவை குறித்துப் பேசியபோது, வேட்பாளர்களுக்கான தேடல் தொடர்ந்து நடைபெறும் ஒன்று என்று திரு சிங் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
பாட்டாளிக் கட்சியினர் ஏற்கெனவே அனைத்துப் பின்னணிகளிலிருந்தும் வரும் சிங்கப்பூரர்களை ஈடுபடுத்தி, வீடு வீடாகச் சென்று குடியிருப்பாளர்களுடன் உரையாடி வருவதாக அவர் கூறினார்.
அது தொடரும் என்று கூறிய திரு சிங், அழைப்பு விடுக்கப்படும்போது அவர்களில் சிலர் பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சிக்காக நிற்க முன்வருவார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.