பொதுத் தேர்தல் 2025ல் பாட்டாளிக் கட்சி சார்பாகக் களமிறங்குகிறார் 39 வயது அலெக்சிஸ் டாங்.
இவர் பொங்கோல் குழுத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பொதுத் தேர்தலில் இவர் போட்டியிடுவது இதுவே முதல்முறை.
இந்நிலையில், தாம் எதிர்நோக்கிய சவால்கள், தேர்தல் பிரசார அனுபவங்கள் ஆகியவை குறித்து திருவாட்டி டாங் மனந்திறந்துள்ளார்.
இவர் 2020ஆம் ஆண்டில் பாட்டாளிக் கட்சியில் தொண்டூழியராக இணைந்தார்.
வீடு வீடாகச் சென்று குடியிருப்பாளர்களைச் சந்திப்பதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்- குடியிருப்பாளர் சந்திப்பிலும் திருவாட்டி டாங் உதவி செய்தார்.
சவால்கள் உள்ளபோதிலும் மக்களுக்காகக் கடுமையாக உழைக்க பாட்டாளிக் கட்சி இலக்கு கொண்டுள்ளதால் அக்கட்சியில் இணைந்ததாக அவர் கூறினார்.
தமது சொந்த வாழ்க்கையிலும் சவால்களை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டபோது தமது உடலில் கட்டி இருப்பதற்கான அறிகுறிகள் இருந்ததாக அவர் கூறினார்.
அது முற்றிப்போன நிலையிலான புற்றுநோயாக இருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவியதாக திருவாட்டி டாங் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பல மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அது வெறும் கிருமித்தொற்று என்று தெரியவந்தது.
சிகிச்சை பெற்ற திருவாட்டி டாங், முழுமையாகக் குணமடைந்துவிட்டார்.
வாழ்வில் அர்த்தமுள்ள பணிகளில் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுத்ததாக அவர் கூறினார்.
இதையடுத்து, பொதுத் தேர்தலில் போட்டியிடத் தாம் தீர்மானித்ததாக திருவாட்டி டாங் தெரிவித்தார்.
பொங்கோல் குழுத் தொகுதியில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சிக் குழுவுடன் மோதுவது சாதாரணமானதல்ல என்றார் அவர்.
தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானால் குடியிருப்பாளர்கள் கோடிகாட்டும் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்து விவாதிக்க இருப்பதாக திருவாட்டி டாங் தெரிவித்தார்.
குறிப்பாக, கல்வி தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை தர இருப்பதாக அவர் சொன்னார்.
பிள்ளைகளின் துணைப்பாட வகுப்புகளுக்கான கட்டணத்தைச் செலுத்தமுடியாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவி செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
அவர்களுக்கு கூடுதல் கல்வி ஆதரவு வழங்க திருவாட்டி டாங் எண்ணம் கொண்டுள்ளார்.
ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறுபவர்களுக்கும் கைகொடுக்க இருப்பதாக அவர் கூறினார்.
திருவாட்டி டாங் நிதித்துறையிலிருந்து தொழில்நுட்பத்துறைக்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தேர்தல் பிரசாரக் கூட்டம் தொடர்பான அனுபங்களையும் திருவாட்டி டாங் பகிர்ந்துகொண்டார்.
சனிக்கிழமை (ஏப்ரல் 26) தெமாசெக் தொடக்கக்கல்லூரியில் பாட்டாளிக் கட்சி தனது பிரசாரக் கூட்டத்தை நடத்தியது.
அதைத் திருவாட்டி டாங் வழிநடத்தினார்.
ஆதரவாளர்கள் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்துகொண்டிருந்தபோது மேடையில் ஏறி அவர்களிடம் எவ்வாறு பேசுவது என்பது குறித்து ஹவ்காங் தனித்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிங் எங் ஹுவாட், மேடைக்குப் பின்னால் தமக்கு ஆலோசனை வழங்கியதாக திருவாட்டி டாங் கூறினார்.
சக வேட்பாளர்கள் தமக்கு உற்சாகம் அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
முதல் பிரசாரக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் அதே துடிப்புடன் செயல்பட தாம் முனைப்புடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பொங்கோல் குழுத்தொகுதியில் போட்டியிடும் தமது பாட்டாளிக் கட்சிக் குழு நெருக்கமான உறவு கொண்டுள்ளதாக திருவாட்டி டாங் கூறினார்.
பொங்கோலில் தொகுதி உலா செல்லும்போது குடியிருப்பாளர்கள் தங்களை அன்புடன் வரவேற்பதை திருவாட்டி டாங் சுட்டினார்.