ஜாலான் காயு தனித்தொகுதி பாட்டாளிக் கட்சி வேட்பாளர் ஆண்ட்ரே லோ கடந்த காலத்தில் அனுப்பியிருந்த டெலிகிராம் குறுஞ்செய்திகள் இப்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அவற்றில் தாம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்கு திரு லோ, 33, மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். புதன்கிழமை (ஏப்ரல் 30) அதிகாலை அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் இதுகுறித்து விளக்கமளித்தார்.
அந்தக் குறுஞ்செய்திகள், தம்முடன் படித்த வர்த்தகப் பள்ளி வகுப்பு மாணவர்கள் இடம்பெற்றிருந்த டெலிகிராம் குழுவில் தாம் தனிப்பட்ட முறையில் அனுப்பியிருந்தவை என்றார் அவர்.
“அவற்றில் பெரும்பாலானவை கொவிட்-19 பெருந்தொற்றின்போது அனுப்பப்பட்டவை. வீட்டில் முடங்கிக்கிடந்தபோது எங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தோம்,” என்று திரு லோ கூறினார்.
சில அம்சங்கள் குறித்து தாம் எப்போதும் உறுதியான கருத்து கொண்டிருப்பதைச் சுட்டிய அவர், சிங்கப்பூர் பற்றியும் தாம் வலுவான நம்பிக்கை கொள்வதாகவும் கூறினார்.
“இவையே பாட்டாளிக் கட்சி வேட்பாளராக நான் போட்டியிட வைத்தன,” என்றார் அவர்.
எது எப்படி இருந்தாலும், தாம் கருத்துகளை வெளிப்படுத்திய விதம் குறித்து பெருமைகொள்ளவில்லை என்று சொன்ன திரு லோ, அப்போது தாம் பயன்படுத்திய வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். வாழ்வின் முந்தைய ஒரு கட்டத்தில் இது நடந்திருப்பதாக அவர் கூறினார்.
“இப்போது நான் திருமணமாகியுள்ளேன், விரைவில் தந்தையாகவுள்ளேன். பாட்டாளிக் கட்சியுடன் ஐந்து ஆண்டுகளாக நான் செயல்பட்டுள்ளேன்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூரர்களின் யதார்த்த நிலை குறித்து இந்த அனுபவம் எனக்குக் கண்திறப்பாக அமைந்துள்ளது. காலவோட்டத்தில் நான் முதிர்ச்சியடைந்துள்ளேன்,” என்று திரு லோ எடுத்துரைத்தார்.