செப்டம்பர் 3ஆம் தேதி ஜோகூருக்கு காரில் சென்ற சிங்கப்பூரர் ஒருவர், மலேசியாவில் குடிநுழைவுச் சாவடியில் தனது கடப்பிதழில் நுழைவு முத்திரை குத்தப்பட்ட பிறகு, தற்செயலாகக் கடப்பிதழைப் பார்த்தபோது அதில் தவறான தேதி முத்திரையிடப்பட்டதைக் கவனித்தார்.
இச்சம்பவம் பற்றி திரு டேனியல் டான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் இதுபோன்ற சம்பவம் நிகழாதிருக்க, மற்றவர்கள் தங்கள் கடப்பிதழைச் சரிபார்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
தனது கடப்பிதழில் நுழைவு தேதி முத்திரையிடப்பட்ட பிறகு, சற்று தள்ளிப்போய் காரை நிறுத்திவிட்டு, தனது கடப்பிதழைப் பார்த்தபோது அதில் செப்டம்பர் 3ஆம் தேதி என்று முத்திரையிடப்படுவதற்குப் பதிலாக ஆகஸ்ட் 3ஆம் தேதி என்று முத்திரையிடப்பட்டிருந்ததைக் கவனித்தார்.
ஜோகூர் குடிநுழைவுச் சாவடியைக் கடக்கும்போது அந்தச் சாவடியின் எண்ணை மனப்பாடம் செய்து வைக்கும் பழக்கமுடையவர் திரு டான்.
அந்தப் பழக்கத்தால் எந்தச் சாவடியில் கடப்பிதழில் தேதி முத்திரை குத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், அந்தச் சாவடிக்குச் சென்று அங்குள்ள மலேசியக் குடிநுழைவு அதிகாரியிடம் தவறான தேதி குறித்து தெரிவித்தார்.
அந்த அதிகாரியோ, ஒரு சிறு புன்னகையுடன் “ஓ தவறான தேதி,” என்று மட்டும் சொல்லிவிட்டு, சரியான தேதி கொண்ட முத்திரையைக் குத்தினார்.
தனது கடப்பதழில் இரண்டு தேதிகளைக் கொண்ட முத்திரைகளைக் காட்டும் புகைப்படத்தை திரு டான் தனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 3ஆம் தேதி முத்திரையின் மேல் ‘VOID’ அதாவது ‘செல்லாது’ என்று கையால் அந்த அதிகாரி எழுதினார்.
தனது ஃபேஸ்புக் பதிவில், உடனடியாக திருத்தம் செய்ததற்காக அந்தப் பெண் அதிகாரிக்கு திரு டான் நன்றி தெரிவித்தார். ஆனால் தன்னைப் போலவே இதேபோன்ற சூழ்நிலையை அனுபவித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல் தங்களுக்கும் நிகழ்ந்துள்ளது என்று சிலர் பதிவிட்டனர்.
மற்றொரு ஃபேஸ்புக் பயனாளர், ஏழு பேர் கொண்ட குழுவில் அதே நாளில் குடிநுழைவுச் சாவடியைக் கடந்து சென்றதாகவும், திரு டானைப் போலவே அவர்கள் அனைவருக்கும் தவறான முத்திரை குத்தப்பட்டதாகவும் கூறினார்.
மற்ற பயனாளர்கள், இந்த சம்பவம் பற்றி பகிர்ந்ததற்காக திரு டானுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் அனைவரும் விழிப்புடன் இருக்கவும் தங்கள் கடப்பிதழ்களைச் சரிபார்க்கவும் நினைவூட்டினர்.