அதிவேகமாகச் சென்ற கறுப்புநிறப் படகு ஒன்றில் தப்பிச்சென்ற ‘ஊடுருவிகளை’, அபாய ஒலி முழக்கத்துடன் கடலோரக் காவல்படையின் சுற்றுக்காவல் படகு ஒன்று விடாமல் பின்தொடர்ந்து சென்றது.
‘ஊடுருவிகளை’ அதிகாரிகளின் படகு நெருங்கிய வேளையில், போலி வெடிகுண்டு ஒன்றை அந்தக் கும்பல் நீரில் வீசிவிட்டு தப்பிக்க முயன்றது. ஆனால், அவர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையின் கடலோரக் காவல்படை.
அதேவேளையில், இந்நடவடிக்கையில் இணைந்துகொண்ட சிங்கப்பூர் கடற்படையின் முக்குளிப்புப் பிரிவு வீரர்கள், உடனே நீருக்குள் குதித்து, வெடிகுண்டாகப் பாவிக்கப்பட்ட அந்தப் பொருளை நீருக்கடியில் வெடிக்கவைத்தனர்.
அங்கு மேல்மட்டத்தில் பேரளவில் நீர் சிதறிப் பரவியதைக் காணமுடிந்தது.
சிங்கப்பூர் கடற்படையும் சிங்கப்பூர் காவல்துறையின் கடலோரக் காவல்படையும் இணைந்து தேசிய தினத்தன்று வழங்கவிருக்கும் “முழுமைத் தற்காப்பு 40 ஆற்றல்வாய்ந்த தற்காப்புக் கண்காட்சி”யின் ஓர் அங்கம் இது.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) காவல் துறையின் கடலோரக் காவல்படையும் கடற்படையும் மேற்கொண்ட கடல் சார்ந்த நிகழ்ச்சிக்கான பயிற்சிகளையும் தேசிய தினம் 2024 அணிவகுப்பின் ஒத்திகையையும் ஊடகங்கள் பார்வையிட அழைக்கப்பட்டன.
ஆகாயம், நிலம், நீர் என அனைத்திலும் நிகழக்கூடிய அபாயங்களைக் காட்சிப்படுத்தும் விதமாக, இந்த முழுமைத் தற்காப்பு 40 அங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் 40 வகை உபகரணங்களுடன் 400க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் ஆயுதப் படை, சிங்கப்பூர் ஆகாயப் படை, மின்னிலக்க, உளவுத்துறை, சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவை, தாங்கள் எதிர்கொள்ளும் மிரட்டல்களையும் இடையூறுகளையும் செயல்முறையில் விளக்கவுள்ளன.
சிங்கப்பூரின் 59வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் முதல்முறையாக, பார்வையாளர்கள் பாடாங் திடலிலும் மரினா பே நீரிணையிலும் இடம்பெறும் நிகழ்ச்சிகளைக் காணலாம். நிலத்திலும் நீரிலும் நடப்பதால், அதிகமானோரை ஈர்க்கும் ஒரு புத்தம்புதிய அனுபவமாக இது இருக்கும்.
சிங்கப்பூர் நீரிணையில் இருக்கும் ஒரு வர்த்தகக் கப்பல் மீது மேற்கொள்ளப்படும் ஒரு பாவனைத் தாக்குதலை சிங்கப்பூர் கடற்படை எவ்வாறு கையாளும் என்பதை முதல்முறையாக தேசிய தின அணிவகுப்பு வரலாற்றில் நேரடியாகக் காணும் அனுபவத்தையும் பார்வையாளர்கள் பெறுவர்.