சிங்கப்பூரில் ஆரஞ்சு சுவையில் விற்கப்படும் யாக்குல்ட் பானம் கூடிய விரைவில் வேறு சுவைக்கு மாறவிருக்கிறது.
ஜூலை மாதத்திலிருந்து ஆரஞ்சு சுவைக்குப் பதிலாக புதிய பீச் சுவையை யாக்குல்ட் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
“யாக்குல்ட்டின் ஆரஞ்சு சுவைப் பிரியர்கள் இப்போதே அதை வாங்கி அருந்திவிடுங்கள்,” என்றார் யாக்குல்ட் நிறுவனத்தின் சிங்கப்பூர் நிர்வாக இயக்குநர் மசாக்கி சுனாமி.
சிங்கப்பூரில் 1980ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாகப் புதிய சுவையை அறிமுகம் செய்கிறது யாக்குல்ட்.
தற்போது ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள் ஆகிய சுவைகளில் கொழுப்பும் கோதுமைப் புரதமும் இல்லாத பானத்தை நிறுவனம் விற்பனை செய்கிறது.
இந்நிலையில், ஆரஞ்சு சுவையில் பானங்கள் தயாரிப்பதை இம்மாதம் இறுதிக்குள் யாக்குல்ட் நிறுத்துவதாகத் தெரிவித்தது. அதன்பின், கடையில் இருப்பு இருக்கும்வரை மட்டுமே ஆரஞ்சு சுவை பானத்தை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
சிங்கப்பூருக்குப் பிற சுவைகளில், குறிப்பாக பீச் சுவை பானத்தைக் கொண்டுவரும்படி வாடிக்கையாளர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்ததாக சுனாமி கூறினார்.
சீனாவில், 2024ஆம் ஆண்டு பீச் சுவையில் யாக்குல்ட் பானம் அறிமுகம் செய்யப்பட்டது. ஐரோப்பா, பிரேசில், வியட்னாம் ஆகியவற்றிலும் அது விற்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மெக்சிகோ, சீனா போன்ற நாடுகளில் மஸ்கட் சுவையிலும் இந்தோனீசியா, இந்தியா போன்றவற்றில் மாம்பழச் சுவையிலும் யாக்குல்ட் பானங்களைப் பருகலாம்.
சிங்கப்பூர்த் தொழிற்சாலைகளின் உற்பத்தியில் உள்ள வரம்பு காரணமாக ஆரஞ்சு சுவைக்கும் பீச் சுவைக்கும் இடையில் முடிவெடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக சுனாமி சொன்னார்.
ஹில்வியூ அவென்யூவில் 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யாக்குல்ட் நிறுவனம், செனோக்கோ அவென்யூவில் உள்ள தலைமையகத்துக்கு 1992ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.


