வடகிழக்கு வட்டாரத்துக்குப் புத்துயிர் அளிக்க புதிய யோசனைகள்

வடகிழக்கு வட்டாரத்துக்குப் புத்துயிர் அளிக்க புதிய யோசனைகள்

2 mins read
82c2ca98-dac6-49fd-80b0-08fbfa7535a1
இயோ சூ காங் விளையாட்டு மையம் விரைவில் மறுசீரமைக்கப்படலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இயோ சூ காங் எம்ஆர்டி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் விளையாட்டு, நல்வாழ்வு, சுகாதாரப் பராமரிப்பு வசதிகளைக் கொண்ட நடுவமாக மாற்றப்படும்போது, இயோ சூ காங் விளையாட்டு மையமும் மறுசீரமைக்கப்படலாம்.

அந்தப் பகுதிக்குப் புத்துயிர் அளிக்கும் திட்டங்கள் குறித்து, ஒன் பொங்கோல் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நடமாடும் கண்காட்சியில், வடகிழக்கு வட்டாரத்தில் உள்ள தற்போதைய மற்றும் எதிர்கால பொழுதுபோக்கு வசதிகள் பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தன. செங்காங் வெஸ்ட்டில் ஒரு புதிய பூங்கா அமைக்கப்படுவதும் அவற்றில் ஒன்று.

1980களில் நடுப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட இயோ சூ காங் விளையாட்டு மையத்தில், ஒரு நீச்சல் குளம், பலபயன் விளையாட்டு அரங்கம், சுவர்ப்பந்து நிலையம், டென்னில் நிலையம், உடற்பயிற்சிக் கூடம், திடல், தட வசதிகளைக் கொண்ட விளையாட்டரங்கம் ஆகியவை உண்டு.

அந்த விளையாட்டு மையம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்தப் பகுதிக்குப் புத்துயிர் அளிக்கும் யோசனைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன என்று நகர மறுசீரமைப்பு ஆணையமும், ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.

இயோ சூ காங்கை சுற்றி அமைக்கப்படவிருக்கும் புதிய வசதிகள் துடிப்பாக வாழ்தலுக்கும் மூப்படைதலுக்கும் ஆதரவளிக்கும் என்றும் ஆணையம் கூறியது.

2025க்குள் இயோ சூ காங், மூத்தோருக்கான மறதிநோய் உள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் முதலாவது சிங்கப்பூர் வட்டாரமாக மாற்றியமைக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. அங்குள்ள குடியிருப்பாளர்களில் 40 விழுக்காட்டினருக்குக் குறைந்தது 65 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, செங்காங்கில் ஒரு புதிய பூங்கா அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செங்காங் மேற்கு தொழிற்பேட்டையைச் சுற்றி அமைக்கப்படும் இந்தப் பூங்காவில் பசுமை நிறைந்த பொழுதுபோக்கு தெரிவுகள் இருக்கும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம், தேசிய பூங்காக் கழகம், ஜேடிசி கழகம் ஆகியவை தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்