ஈசூன் ஸ்திரீட் 11ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக கார் நிறுத்தும் இடத்தில், சனிக்கிழமை (ஜூன் 6) மாலை 6 மணியளவில் தமது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த ஆடவர், அங்கிருந்த ஒரு தடுப்புச் சுவர்களைக் கடந்து, நிறுத்தப்பட்டிருந்த ஓர் வாகனத்தையும் மோதி, இறுதியாக குப்பைத் தொட்டியை இடித்தபடி நிறுத்தினார்.
பல போக்குவரத்துக் குற்றங்களுடன் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் அந்த மெர்சிடிஸ் பென்ஸ் வகைக் காரை ஓட்டிய 32 வயது சிவகந்தேஷ் மீது நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூன் 8) குற்றஞ்சாட்டப்பட்டது.
ஏற்கெனவே 2024ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதிவரை எவ்வித வாகன உரிமங்களை வைத்திருக்கவோ, பெறுவதற்கோ சிவகந்தேஷுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எதற்காக அத்தடை நடப்பில் இருந்தது என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.
சம்பவ நாளன்று சிவகந்தேஷ் வாகன நிறுத்துமிடத்தில் இருந்துள்ளார். மேலும் விபத்துக்குள்ளான வாகனத்தின் அடையாள எண் பட்டைகள் அதிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.
விபத்து நடந்தபிறகு சிவகந்தேஷ் அங்கிருந்து வெளியேறிய குற்றமும் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் அவரது வழக்கு நீதிமன்றத்துக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.
போதை ஏற்படுத்தும் எதையும் உட்கொண்ட நிலையில் முதன்முறையாக வாகனத்தை ஓட்டுவோருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனையுடன் $10,000 அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

