இளையர்கள் குழுக்களாக இணைந்து சுயமாகச் சமூகத் திட்டங்களை மேற்கொள்வதற்காகப் பதிவு செய்யும் இணையவாசல் கடந்த அக்டோபரில் ஊடுருவப்பட்டது. இதன் காரணமாக ஏறத்தாழ 13,000 பேரின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சனிக்கிழமை (நவம்பர் 21) இரவு சிங்கப்பூர் ஒய்எம்சிஏ அமைப்பின் பொதுச் செயலாளரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான வூ மெய் லிங் வெளியிட்ட அறிக்கையில், தங்களது ‘யூத் ஃபார் காசஸ்’ இணையவழி விண்ணப்ப வாசலிலும் அதனுடன் தொடர்புடைய தரவுத்தளத்திலும் இணையப் பாதுகாப்புச் சம்பவம் நிகழ்ந்தது குறித்து அக்டோபர் 19ஆம் தேதி தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
அந்த இணையவாசலில் பங்கேற்பாளர்களின் பெயர்கள், பள்ளிகள், அவர்கள் ஆதரவளித்த அமைப்புகளின் விவரங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், அதனுடன் தொடர்புடைய தரவுத்தளத்தில் பங்கேற்பாளர்களின் முழுமையான அல்லது பகுதியளவு அடையாள அட்டை எண்கள், தொடர்பு விவரங்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்கள், பொறுப்பாசிரியர்கள், மதியுரைஞர்கள், நடுவர்கள் ஆகியோரின் பெயர்களும் தொடர்பு விவரங்களும் சேமிக்கப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்ட அமைப்பு அக்டோபர் 19ஆம் தேதியே இணையத்திலிருந்து துண்டிக்கப்பட்டதாகவும் இச்சம்பவம் குறித்து புலனாய்வு செய்ய இணையப் பாதுகாப்பு நிபுணர்களைத் தங்களது அமைப்பு நியமித்துள்ளதாகவும் திருமதி வூ தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) காலை 7 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சோதனை செய்தபோதும் அந்த இணையவாசலை அணுக முடியவில்லை.
“இணையவாசலில் அனுமதியின்றி ஊடுருவல் நிகழ்ந்துள்ளது புலனாய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தனிப்பட்ட தரவுகள் அணுகப்பட்டனவா, நகலெடுக்கப்பட்டனவா அல்லது திருடப்பட்டனவா என்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியவில்லை,” என்று திருமதி வூ கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய 13,000க்கும் மேற்பட்டோரைத் தாங்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு வருவதாகவும் எத்தகைய தனிப்பட்ட தகவல்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன என்பதையும் தங்களைத் தற்காத்துக்கொள்ள அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் விளக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
