நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களும் இந்த மாதத்திலிருந்து ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் (Generative AI) (ஜென் ஏஐ) கற்றுக்கொள்ளவிருக்கின்றனர்.
வேலையிடங்களில் அதிகரித்துவரும் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கு மாணவர்களைத் தயாராக்க ஜென் ஏஐ கற்பிக்கப்படுகிறது.
மாணவர்கள் எந்தத் துறையிலிருந்தாலும் பாடத்திட்டங்களில் அது நடைமுறைப்படுத்தப்படும்.
ஜென் ஏஐ மூலம் பிரச்சினைகளைத் தெளிவாகக் கண்டறிந்து சரியான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு அவற்றுக்குத் தீர்வுகாணும் அனுபவத்தை மாணவர்கள் அனைவரும் பெறுவர் என்று பேராசிரியர் ஓகுஸ் அச்சார் தெரிவித்தார்.
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் துணிச்சல் உள்ளவர்களாகவும் துரிதமாக மாறிவரும் வேலையிடச் சூழலில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கவும் ஜென் ஏஐ மாணவர்களுக்கு உதவும் என்று நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி நம்புகிறது.
நீ ஆன் தவிர பிற பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் செயற்கை நுண்ணறிவை அவற்றின் பாடத்திட்டத்தில் இணைத்துள்ளன.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் அனைந்துப் பட்டயப் பாடத்திட்டங்களிலும் ஜென் ஏஐ சேர்க்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அனைவரும் செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகளை அறிந்து வெவ்வேறு துறைகளுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் அடிப்படை செயற்கை நுண்ணறிவு பாடத்தை பொதுவான அடிப்படைப் பாடத்திட்டம் மூலம் கற்றுக்கொள்கின்றனர்.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து அனைத்துப் பட்டயப் பாடத்திட்டங்களிலும் அடிப்படை செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி 2024ஆம் ஜனவரியில் செயற்கை நுண்ணறிவைச் சோதித்து பார்ப்பதற்கான கூடத்தை அமைத்தது.
செயற்கை நுண்ணறிவு மிகவும் துரிதமாக உருமாறிவருவதால் பாடத்திட்டங்களும் மாறவேண்டிய சூழல் உள்ளது என்று தொழிற்கல்லூரிகள் குறிப்பிட்டன.

