சீனப் புத்தாண்டுக்கென புதிய நோட்டுகளை முன்பதிவு செய்யலாம்

2 mins read
5be4e0e6-f9e8-43cc-a2c5-fc64c10868c6
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனப் புத்தாண்டுக்கென கிளமெண்டி சமூக மன்றத்தின் வெளியில் தானியங்கி இயந்திரத்தில் ரொக்கம் எடுத்த ஒருவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீனப் புத்தாண்டு, பிப்ரவரி 17, 18ஆம் (வியாழன், வெள்ளி) தேதிகளில் இரண்டு நாள்களுக்குக் கொண்டாடப்படவுள்ளது.

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் இன்றியமையாத ஒன்றாக விளங்கும் ‘அங்பாவ்’ எனப்படும் ரொக்கப்பரிசுக்கான புதிய நோட்டுகளுக்கு ஜனவரி 27ஆம் தேதி முதல் பொதுமக்கள் சிங்கப்பூரின் முக்கிய வங்கிகளில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

அவ்வாறு முன்பதிவு செய்யப்படும் நோட்டுகளைப் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.

டிபிஎஸ், ஓசிபிசி, யூஓபி ஆகிய வங்கிகளில் நோட்டுகளைப் பரிவர்த்தனை செய்யவிரும்பும் வாடிக்கையாளர்கள், வங்கிகளின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் அல்லது கைப்பேசிச் செயலிகளில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் திங்கட்கிழமை (ஜனவரி 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரொக்க நோட்டுப் பரிவர்த்தனைகளில் சில வகைகள் உள்ளன. புதிய நோட்டுகளை முன்பதிவு செய்து பெறுவது, பழைய நோட்டுகளைப் புதிய நோட்டுகளாக மாற்றுவது, சுத்தம் செய்யப்பட்ட பழைய நோட்டுகளைப் பரிவர்த்தனையின்போது ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட சில வகையில் வாடிக்கையாளர்கள் செயல்படுகின்றனர்.

இவ்வகையான பரிவர்த்தனைகளைப் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதிமுதல் செய்துகொள்ளலாம் என்று ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் நடப்பதற்கு சிரமப்படுபவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் நோட்டுகளை மாற்றிக்கொள்ள நேரடியாக வங்கிகளுக்குச் செல்லலாம்.

நீடித்து நிலைக்கக்கூடிய வகையில் விழாவைக் கொண்டாட அன்பளிப்புக்கு உகந்த பயன்படுத்தப்பட்ட நோட்டுகளை அல்லது மின்னிலக்க அன்பளிப்புகளை வழங்குமாறு சிங்கப்பூர் நாணய ஆணையம் பொதுமக்களை ஊக்குவிக்கிறது.

டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கியின் வாடிக்கையாளர்கள் புதிய, பயன்படுத்தப்பட்ட நோட்டுகளை 47 இடங்களில், 71 தற்காலிக ‘ஏடிஎம்’ இயந்திரங்களில் பிப்ரவரி 3 முதல் 16ஆம் தேதிவரை பெற்றுக்கொள்ளலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்