வாகன ஓட்டிகள், தங்களுடைய வாகனத்தில் உள்வாகனச் சாதனமான இஆர்பி 2.0வை பொருத்திக் கொள்ள நேரடியாக பழுதுபார்ப்புப் பட்டறையில் பதிவு செய்து கொள்ளலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மின்னியல் சாலைக் கட்டண சாதனமான இஆர்பி 2.0 பதிவு முறையை எளிதாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை இடம்பெறுகிறது என்று ஆணையம் கூறியது.
அடையாளம் காணப்பட்ட பட்டறைகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏதாவது ஒன்றை வாகன ஓட்டிகள் தேர்ந்தெடுத்து, தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு இஆர்பி 2.0க்குப் பதிவு செய்யலாம். இஆர்பி 2.0 பொருத்த வேண்டிய வாகனத்தை மட்டும் பட்டறைக்குக் கொண்டு வரலாம். வேறு ஆவணங்கள் தேவையில்லை. ‘இஆர்பி 2.0’யினைப் பொருத்த இரண்டு முதல் நான்கு மணி நேரம் ஆகலாம் என்று ஆணையம் தெரிவித்தது.
2023 நவம்பரிலிருந்து 150,000 புதிய, ஏற்கெனவே உள்ள வாகனங்களில் உள்வாகனச் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. இது, சிங்கப்பூரில் உள்ள மொத்த வாகனங்களில் 15 விழுக்காடாகும்.
தற்போதுள்ள ஏறக்குறைய 90,000 வாகன உரிமையாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்புகளுக்காகக் காத்திருக்காமல் தங்கள் உள்வாகனச் சாதனத்தைப் பொருத்த முன்கூட்டியே தொடர்பு கொண்டனர். “இது வாகனச் சேவை மற்றும் பழுதுபார்க்கும் நடைமுறையைப் போன்றது, மேலும் வாகன ஓட்டிகள் தங்களுக்கு வசதியான நேரத்தில் மற்ற சேவைகளுடன் சேர்த்து இதையும் செய்து கொள்ளலாம்,” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
2023 ஆகஸ்ட் முதல் இஆர்பி 2.0 பொருத்தும் பணி ஆரம்பக்கால குழுவுடன் தொடங்கியது.
புதிய சாலைக் கட்டண முறை, செயற்கைகோள் அடிப்படையில் செயல்படுகிறது. நெரிசலில் வாகனங்கள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும். அது மட்டுமல்லாமல் சாலைகளில் பெரிய அளவிலான சாவடிகளுக்கு அவசியமிருக்காது. அதற்குப் பதிலாக சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் உள்வாகனச் சாதனம் பொருத்தப்பட்டதும் மெய்நிகர் சாவடிகள் செயலுக்கு வரும்.