உடற்குறையைப் புறந்தள்ளி தொழில், விளையாட்டு இரண்டிலும் சாதிக்கும் இளையர்

உடற்குறையைப் புறந்தள்ளி தொழில், விளையாட்டு இரண்டிலும் சாதிக்கும் இளையர்

2 mins read
862c58de-eac8-4a2a-8f6e-c0057dfd828d
நரேஷ் பாபு சிங்கப்பூரில் ‘ரோல்னி’ உணவகத்தைக் கிட்டத்தட்ட ஈராண்டுகளாக நடத்தி வருகிறார். - படம்: கிறிஸ்டோ லியோன்
multi-img1 of 2

ஒரு பக்கம் ஐஸ்கிரீம் வணிகம், மறு பக்கம் பாரா- பளுதூக்கும் பயிற்சி.

கனவை நோக்கிச் செல்லும்போது குறைகள் பெரிதாக இருக்காது என்பதை மெய்ப்பித்து, சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் சுழன்றோடுகிறார் 34 வயது நரேஷ் பாபு.

உடற்குறையுள்ளோருக்கான பளுதூக்கும் போட்டியில் சாதிக்கும் இலக்குடன் அன்றாடம் 2-3 மணி நேரம் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார்.

‘விவோ சிட்டி’யில் அமைந்துள்ள தனது ‘ரோல்னி’ உணவகத்தையும் அன்றாடம் கவனித்து வருகிறார்.

‘குர்டோஸ்’ என்பது பிரபலமான ஹங்கேரி ரொட்டி. அதை ஐஸ்கிரீமூடன் இணைத்துத் தின்பண்டமாய் விற்கிறது அவரது ‘ரோல்னி’ உணவகம். 2024ல் ஒரே ஆளாகக் கடையைத் தொடங்கிய நரேஷ், தற்போது ஐந்து பேர் வரை பணிக்கு அமர்த்தியுள்ளார்.

நரேஷ் கடையில் இல்லையென்றால் உடற்பயிற்சிக் கூடத்தில் இருப்பார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் சிங்கப்பூரின் பாரா-பளுதூக்குதல் பெஞ்ச் பிரஸ் அணியில் இடம்பெற்றுள்ள நரேஷ் அனைத்துலக அரங்கில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்க வேண்டும் என்ற உறுதியுடன் பயிற்சி செய்துவருகிறார். நிச்சயம் அது சாத்தியமாகும் என்று அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

இன்றிருக்கும் உடல் உறுதியையும் மன உறுதியையும் பெற அவர் கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருந்தது.

2011ல் ஏற்பட்ட மோட்டார்சைக்கிள் விபத்தினால் நரேஷின் கால்கள் செயலிழந்தன.

குணமடைந்து, பிறர் உதவியின்றிச் செயல்படக் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆனது. 19 வயதில் ஏற்பட்ட விபத்து அவரை முடக்கிவிடவில்லை. உடல்நிலை தேறியதும் அவர் பிஎஸ்பி கல்விநிலையத்தில் கணக்கியல், நிதித்துறைப் படிப்பில் சேர்ந்தார்.

கூடவே, உடலை வலுப்படுத்த உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லத் தொடங்கினார். மனவுறுதியை வலுப்படுத்தவும் கட்டுப்பாடான வாழ்க்கைக்கும் உடற்பயிற்சி அவருக்கு உதவியது. பளுதூக்குவதில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம் அவரை ஒரு நாளில் பல மணிநேரம் பயிற்சி செய்ய வைத்தது.

2025ல் சிங்கப்பூர் பளுதூக்கும் அணிக்கான தேர்வுகள் நடந்தபோது, அதில் கலந்துகொண்டு தேர்வானார் நரேஷ்.

இளவயதிலேயே சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த நரேஷிற்குப் பட்டப்படிப்பு, தொழில் தொடங்கும் நம்பிக்கையைக் கொடுத்தது.

இடமின்மை, ஊழியர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை ஆக்கபூர்வமாகச் சமாளிக்கும் வகையில் ‘ரோல்னி’ ஐஸ்கிரீம் இயந்திரங்களைச் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

2027ஆம் ஆண்டுத் தொடக்கத்திற்குள் இதுபோன்ற 100 இயந்திரங்களை நாடு முழுவதும் நிறுவவேண்டும் என்பது அவரது இலக்கு. 

“பிடித்த ஓர் அம்சத்தைக் கண்டறிந்து அதில் ஈடுபடும்போது, வலிமையும் செயலூக்கமும் தன்னால் ஏற்படுகிறது. தடைகள் நிறைய இருந்தன. பெற்றோரும் நண்பர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். தன்னம்பிக்கை என்னைச் செயல்படவைக்கிறது,” என்றார் நரேஷ்.

குறிப்புச் சொற்கள்