தீபாவளி உற்சவத்தில் இளம் பிஞ்சுகளின் நடனம்

2 mins read
3b858cae-d13a-4fa4-9ed0-3ad0498a4425
தீபாவளி உற்சவத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை 700க்கும் அதிகமானோர் கலைத் திறனை வெளிப்படுத்தினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லிட்டில் இந்தியா தீபாவளியை வரவேற்க புதுப் பொலிவுடன் தயாராகிவிட்டது. எங்குத் திரும்பினாலும் வண்ண வண்ண விளக்குகளும் அலங்காரங்களும் கண்ணைப் பறிக்கின்றன.

‘ஆட்டம, பாட்டம், கொண்டாட்டம்’ என்ற கருப்பொருளுடன் நடைபெற்றது ஒளியூட்டு நிகழ்ச்சி. கொண்டாட்டத்தை மெறுகேற்றும் வகையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சிராங்கூன் சாலையில் களைக்கட்டியது ‘உற்சவம்’ அணிவகுப்பு.

அதில் 25 பல்லின சமூக, கலை அமைப்புகளிலிருந்து வந்த 700க்கும் அதிகமானோர் உற்சவத்துக்கு அழகு சேர்த்தனர்.

பெரியோர் முதல் சிறியோர் வரை உற்சவ அணிவகுப்பில் ஆவலுடன் பங்கேற்றனர். அவர்களில் ‘அப்சரஸ் ஆர்ட்ஸ்’ கலை நிறுவனத்தின் சிறுவர்களும் அடங்குவர்.

தஞ்சாவூர் பொம்மைகள், அ‌ஷ்டலக்‌‌ஷ்மி, முப்பெரும் தேவியர் என்று பலவித வேடமிட்டு 4 வயதிலிருந்து 11 வயதுக்கு இடைப்பட்ட சிறுமிகள் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் நடனம் ஆடினர்.

அப்சரஸ் நடனமணிகள் தஞ்சாவூர் பொம்மைகள், அ‌ஷ்டலக்‌ஷிமி, முப்பெரும் தேவியர் என்று பலவித வேடமிட்டு நடனம் ஆடினர்.
அப்சரஸ் நடனமணிகள் தஞ்சாவூர் பொம்மைகள், அ‌ஷ்டலக்‌ஷிமி, முப்பெரும் தேவியர் என்று பலவித வேடமிட்டு நடனம் ஆடினர். - படம்: அப்சரஸ் கலை நிறுவனம்

“நான்கு வயது நடனமணிகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் அப்சரஸ் கலைப் பள்ளியில் சேர்ந்து முழுமையாக ஓராண்டுகூட நிறைவடையவில்லை. அத்தகையோர் இன்னும் மேடையில் ஏறியதுகூட கிடையாது. இவ்வளவு பெரிய கொண்டாட்டத்தில் நடனம் ஆடுவது அவர்களுக்குச் சற்று பதற்றமாக இருந்தாலும் சிறப்பாகச் செய்தனர்,” என்றார் அப்சரஸ் கலை நிறுவனத்தின் துணை முதல்வரும் நடன அமைப்பாளருமான திருமதி சீமா ஹரிகுமார்.

அப்சரஸ் கலை நிறுவனத்தின் அணியில் மொத்தம் 18 பேர் நடனமாடி பார்வையாளர்களைக் கவர்ந்தனர். அதற்கு அவர்கள் ஜூன் மாதத்திலிருந்தே தயாராகத் தொடங்கிவிட்டனர். பள்ளி விடுமுறைகளில்கூட அவர்கள் பயிற்சிகள் மேற்கொண்டதாகத் திருமதி சீமா சொன்னார்.

கடம் கார்த்திக் என்ற இந்தியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் நடனத்துக்கு இசையமைத்ததையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

உற்சவத்தின் அணிவகுப்பு, ஹேஸ்டிங்ஸ் சாலை தொடங்கி பர்ச் சாலை வரை நீடித்தது. இரவு 8.15 மணியளவில் அதிபர் தர்மனும் மற்ற முக்கிய விருந்தினர்களும் மயில் உருவில் அமைக்கப்பட்ட சிறப்பு மிதவையில் ஏறி ஊர்வலம் சென்றனர்.

தீபாவளிக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நவம்­பர் 11ஆம் தேதிவரை பல்­வேறு நிகழ்ச்­சிகளும் நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 9ஆம் தேதிவரை மொத்தம் 64 நாள்கள், லிட்டில் இந்தியா வட்டாரம் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும்.

இம்முறை, சிங்கப்பூரின் 60ஆம் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, 600,000 ‘எல்இடி’ மின்விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்