இவ்வாண்டின் பொதுத் தேர்தல் பல்வேறு காரணங்களுக்காகச் சிறப்பானதாகவும் விறுவிறுப்பானதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முதன்முறையாக வாக்களிக்கவுள்ள இளையர்கள் அதிக ஆர்வத்தோடு இருப்பதுடன் தங்கள் பொறுப்பையும் உணர்ந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
பொதுத் தேர்தலை முன்னிட்டு தமிழ் முரசு நடத்திய ‘தேர்தல் களம் - இளையர்கள் பார்வையில்’ வலையொலியில் முதல்முறை வாக்களிக்க இருக்கும் இளையர்கள் அந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
நாட்டின் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் முதன்முறையாக ஈடுபடும் முருகபாண்டியன் உஷாராணி அனுமிதா மிகுந்த ஆவலுடன் இருப்பதாகச் சொன்னார்.
தற்போது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் அவர், வாக்களிப்புக்கு இரு நாள்களுக்கு முன்பு (மே 1ஆம் தேதி) தமது 21ஆம் பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறார்.
மகிழ்ச்சியான புதிய அனுபவம்
“இதுவரை பள்ளிகளிலும் சரி, நண்பர்கள் வட்டத்திலும் சரி, பெரிதாக அரசியல் குறித்த உரையாடல்கள் நடந்ததில்லை,” என்பதைச் சுட்டினார் அனுமிதா.
தற்போது அரசியல் சார்ந்த பல்வேறு கலந்துரையாடல்களும் விவாதங்களும் தெரிந்த வட்டங்களில் நடப்பது புதிய அனுபவமாக இருப்பதுடன் உற்சாகம் தருவதாகவும் அவர் கூறினார்.
அனுமிதாவைப் போல முதன்முறையாக வாக்களிக்கவிருக்கும் மற்றோர் இளையர் 21 வயது கிரிஷ்மிதா ஷிவ்ராம்.
“மக்கள் செயல் கட்சியைச் சிறு வயதில் பாலர் பள்ளிகளுடன் தொடர்புபடுத்திய காலம் போய் நாட்டை வழிநடத்தும் அரசியல் கட்சி என்று இப்போது தெரிந்துகொண்டுள்ளேன்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக் கழகத்தில் அனைத்துலக உறவுகள் துறையில் பயிலும் மாணவியான கிரிஷ்மிதா, நீ சூன் குழுத் தொகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்.
“வாக்களிக்கும் வயதும் உரிமையும் வந்துவிட்டதால் என் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பற்றியும் அவர்கள் பிரதிநிதிக்கும் கட்சிகள், அவற்றின் கோட்பாடுகள் பற்றியும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளது,” என்று கூறினார் கிரிஷ்மிதா.
முதல் முறை பொதுத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துகிறது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு அரசியல் அறிவியல் துறை மாணவரான 24 வயது யுகேஷ் கண்ணன் கூறினார்.
சூடுபிடித்து வரும் அரசியல் சூழலைக் காண்பதும் சுவாரசியமாக உள்ளதாகவும் உரையாடலில் பங்கேற்ற மூன்று இளையர்களும் தெரிவித்தனர்.
சமூக ஊடகப் பயன்பாடு
வேட்பாளர்கள் சமூக ஊடகங்கள்வழி தங்கள் சிந்தனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்வதை மூன்று இளையர்களும் வரவேற்றனர்.
சமூக ஊடகங்கள்வழி வேட்பாளர்களால் எளிதாக மக்களுடன் இணைய முடிவதாகவும் தெரிவிக்க விரும்பும் தகவல்களைத் துரிதமாகக் கொண்டுசேர்க்க முடிவதாகவும் கிரிஷ்மிதா தெரிவித்தார்.
மக்கள் செயல் கட்சி வேட்பாளர் டாக்டர் ஹமீது ரசாக் திரைப்படத்தில் வரும் நடிகர் விஜய்யின் வசனத்தைத் தனது உரையில் பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டினார் வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் வெஸ்ட் குழுத் தொகுதிக் குடியிருப்பாளர் அனுமிதா.
அரசியல் தலைவர்களிடம் எதிர்பார்க்கும் பண்புகள்
“சமூக ஊடகங்களில் வேட்பாளர்கள் நகைச்சுவையான சில செயல்கள் மூலம் மக்களை ஈர்த்தாலும் அவர்களின் திட்டங்களையும் அவர்களது கட்சிகளின் ஆற்றலையும் மனத்தில் கொண்டு வாக்களிப்பதே முக்கியம்,” என்பதை உணர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத் தலைவர்களிடம் எந்தெந்த பண்புகள் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு அனுமிதாவும் கிரிஷ்மிதாவும் தன்னம்பிக்கை, ஆற்றல், அனுதாபம், மக்களின் பிரதிநிதியாகச் செயல்படுதல் ஆகியவற்றைச் சுட்டினர்.
“என் தலைவர்களிடம் நான் எதிர்பார்ப்பது, நமது முதல் பிரதமரிடம் இருந்த துணிவும் தொலைநோக்குப் பார்வையுமே,” என்றார் யுகேஷ்.
மக்களிடம் இன்று சில முடிவுகள் பிரபலமாக இல்லாவிட்டாலும், அவை நாட்டுக்கு அவசியமானவை என்றால் அதுகுறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி, புரியவைத்து உறுதியுடன் அம்முடிவுகளைச் செயல்படுத்தும் வல்லமையைப் பெற்றிருத்தல் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
அன்றாட உரையாடலில் அரசியல்
இளையர்களின் அன்றாட உரையாடல்களில் அரசியல் மறைமுகமாகப் பல இடங்களில் எட்டிப் பார்ப்பதாக யுகேஷ் சொன்னார்.
“குறைந்து வரும் வேலை வாய்ப்புகள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம், வீட்டு விலைகள் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகையிலேயே அதன் பின்பு அரசியல் மறைந்து உள்ளது. சற்று ஆழமாக இந்த விளைவுகளின் பின் இருக்கும் காரணிகள் யாவை என்று வினவினால், அதன் பின் இருக்கும் அரசுத் திட்டங்கள், அரசியல் கோட்பாடுகள் ஆகியவை புலப்படும்,” என்றார் அவர்.
“இன்று நம் அனைவரின் கைகளிலும் திறன்பேசி வந்துவிட்ட நிலையில், அனைவராலும் சமூக ஊடகங்களை எளிதில் பயன்படுத்த முடிகிறது.
“அரசியல் கட்சிகள் தங்கள் திட்டங்கள், கோட்பாடுகள், அன்றாட நடைமுறைகள் ஆகியவற்றைச் சமூக ஊடகங்களின் வழி மக்களுடன் பகிர்ந்துகொள்வது, தகவல்கள் துரிதமாக இளையரை எட்டுவதை உறுதி செய்கிறது,” என்று குறிப்பிட்டார் யுகேஷ்.