எங்கள் நாடு எங்கள் பெருமை

அந்நிய மண்ணில் பெருக்கெடுத்த தாய்நாட்டுப் பற்று

எங்கள் நாடு எங்கள் பெருமை

4 mins read
71208e01-8db6-4581-9051-91067c0e6fd8
அயர்லாந்தில் மருத்துவம் பயிலும் சிங்கப்பூர் மாணவர்கள் ஸ்ரீராம் கதிரேசன், மோகித். - படம்: லாவண்யா வீரராகவன்
Google News Preferred Icon

கல்விக்காக வெளிநாட்டில் வசித்தாலும், விடுமுறைக்காலத்தில் வீடு திரும்பிய இளையர்கள் சிலர் தேசிய தினக் கொண்டாட்டங்களில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். 

இன, சமய, வயது வேறுபாடின்றி அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்றிருந்தாலும், முதன்முறையாகச் சிங்கப்பூரிலிருந்து வெளியேறி, பிற நாடுகளில் பயிலும் மாணவர்கள், சிங்கப்பூரின் பெருமையையும் அடையாளத்தையும் கொண்டாடத் தாயகத்தில் திரண்டிருந்த உணர்வு முற்றிலும் மாறுபட்டிருந்தது. 

வீட்டை நீங்கித் தொலைவில் வசிக்கும்போது, சிங்கப்பூரின் சிறப்புகள், பெருமை, அருமையைக் கூடுதலாக உணர்வது அவர்களின் ஒருமித்த கருத்தாக வெளிப்பட்டது. 

“சிங்கப்பூர் எனது அடையாளம். எனது குடும்பம், நண்பர்கள் மட்டுமன்றி, இங்குள்ள உணவு, சுற்றுப்புறம் என வீடு தரும் உணர்வு வெளிநாட்டில் இருக்காது,” என்றார் அயர்லாந்தின் டப்ளின் நகரில் மருத்துவம் பயிலும் ஸ்ரீராம் கதிரேசன், 22. 

கடந்த ஒன்பது மாதங்களாக அங்கு வசிக்கும் இவர், இங்கிருந்தவரை தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் நேரடியாகப் பங்கேற்றதில்லையெனச் சொன்னார். 

“தேசிய தினமும் எனது விடுமுறையும் ஒன்றாக அமைந்ததில் மகிழ்ச்சி. இதுவரை நேரில் சென்று பார்க்கவேண்டும் எனும் எண்ணம் தீவிரமாக இருந்ததில்லை என்றாலும், இப்போது பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. எனது நண்பர், குடும்பத்தினருடன் பங்கேற்கிறேன்,” என்றார் அவர். 

அவருடன் அயர்லாந்தில் பயிலும் மற்றொரு சிங்கப்பூரரான மோகித், 22, “அங்கு இருக்கும்போது சிங்கப்பூர் குறித்துப் பேசுவோம். இந்த அணிவகுப்புடன், இசை நடன நிகழ்ச்சிகளும் எனக்கு விருப்பமான அங்கங்கள்,” என்றார். நிகழ்ச்சியின் பிரம்மாண்டம் தம்மை வியக்க வைத்ததாக அவர் உற்சாகத்துடன் குறிப்பிட்டார். 

தமது மருத்துவப் படிப்பிற்காகக் கடந்த மூன்றாண்டுகளாக லண்டனில் வசிக்கும் கவின் குமார், 28, தமது பாட்டி லீலா ஞானமணியுடன் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். 

தமது தோழி, பாட்டியுடன் தேசிய தினக் கொண்டாட்டங்களைக் காணவந்த மருத்துவ மாணவர் கவின் குமார்.
தமது தோழி, பாட்டியுடன் தேசிய தினக் கொண்டாட்டங்களைக் காணவந்த மருத்துவ மாணவர் கவின் குமார். - படம்: சுந்தர நடராஜ்

“சிங்கப்பூர் தொடர்பில் எனக்குள்ள நினைவுகள் ஏராளம். எனது மனத்துக்கு நெருக்கமானது என் நாடு,” என்று பெருமையுடன் கூறினார் கவின்.  

“சிங்கப்பூரில் என் வயதில் உள்ள பெண்கள் முதல், மூத்தோர்வரை அனைவரும் எப்போதும், எங்கும் பாதுகாப்பாகச் சென்று வரலாம். எந்த இடமும் தூய்மையாக இருக்கும். இவற்றை லண்டனில் எதிர்பார்க்க முடியாது. அங்கு வசிக்கும்போது இந்தப் புரிதல் எனக்கு ஏற்பட்டது,” என்றார் அவர். 

“நான் யார் என்பதே என் நாடு தந்த அடையாளம்தான். பல்லின மக்கள் ஒன்றிணைந்து எவ்வித வேறுபாடுகளுமின்றி வாழ்வது சிறப்பானது. என் நாட்டு மக்கள் அனைவருடன் இணைந்து இந்நாளைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி,” என்றார் கவின். 

சிங்கப்பூருக்கு வயது 61 என்றும் தமது பாட்டிக்கு வயது 89 என்றும் சுட்டிய அவர், சிங்கப்பூரின் வளர்ச்சியை நேரடியாகப் பார்த்த தன் பாட்டியின் அனுபவங்களையும் கதைகளையும் கேட்டு வளர்ந்ததாகக் குறிப்பிட்டார். 

முன்னேற்றத்துக்கான உழைப்பைத் தந்த தலைமுறையுடன் அம்முன்னேற்றத்தின் பலனை அனுபவிக்கும் தாமும் இணைந்து கொண்டாடுவது கூடுதல் சிறப்பென்றும் சுட்டினார் கவின். 

இங்குப் பிறந்து வளர்ந்து, சில ஆண்டுகாலம் வெளிநாட்டில் வாழ்ந்து, திரும்பியபின் ஆறாண்டுகளுக்குப் பிறகு தேசிய தின நிகழ்ச்சியை நேரில் கண்டார் சந்தைப்படுத்துதல் துறை ஊழியர் பிருந்தா, 26. 

வெளிநாட்டில் வசித்துத் திரும்பிய ஆறாண்டுகளுக்குப்பின் தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரில் கண்ட மகிழ்ச்சியில் பிருந்தா (வலது).
வெளிநாட்டில் வசித்துத் திரும்பிய ஆறாண்டுகளுக்குப்பின் தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரில் கண்ட மகிழ்ச்சியில் பிருந்தா (வலது). - படம்: ஜெசிகா ஜீவா

இவ்வாண்டு இடம்பெற்ற ஆளில்லா வானூர்தி அங்கம், அத்துடன் இடம்பெற்ற வான்சாகச நிகழ்ச்சியும் தம்மைப் பெரிதும் கவர்ந்ததாகச் சொன்னார் அவர். 

உற்சாகத்துடன் பங்கேற்ற உள்ளூர் இளையர்கள்

“இந்த நாடு எனக்கு அளித்துள்ள வாய்ப்புகள் ஏராளம். பல விதமான மக்களுடன் பழகவும் கருத்துகளைப் பகிரவும் வாய்ப்புகள் உள்ளன. வேற்றுமைகளை மறந்து, ஒன்றாக வாழ்வது நமது சிறப்பு,” என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் லோகநாதன் ஹேமந்த். 

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் லோகநாதன் ஹேமந்த்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் லோகநாதன் ஹேமந்த். - படம்: லாவண்யா வீரராகவன்

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்றதாகவும் மீண்டும் பங்கேற்பதில் மகிழ்ச்சி என்றும் சொன்னார் ஹேமந்த்.

முதன்முறையாகக் குடும்பத்துடன் அணிவகுப்பைக் காணவந்த முகம்மது ஷஃபீக், இவ்வாண்டு செஞ்சிங்கங்கள் வந்திறங்கும் அங்கம் இல்லாதது ஏமாற்றமளிப்பதாகச் சொன்னார். 

தேசியச் சேவைக் காலத்திலிருந்தே நாட்டின் மீதான தனது பற்றும் பாசமும் தொடர்ந்து அதிகரித்ததாகக் கூறிய தொழில்நுட்ப வல்லுநரான ஷஃபீக், இந்த நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்பது உணர்வுபூர்வமான தருணமென்றும் சொன்னார்.

பல ஆண்டுகளாகத் தொலைக்காட்சியிலேயே நிகழ்ச்சிகளைப் பார்த்ததால் நேரில் பார்ப்பது முற்றிலும் மாறுபட்ட அனுபவம் என்றார் ரீஜன்ட் உயர்நிலைப்பள்ளி மாணவி திவ்யஸ்ரீ கதிரேசன், 14. 

திரையில் மட்டுமே பார்த்து வந்த திவ்யஸ்ரீ கதிரேசன், முதன்முறையாகத் தமது அண்ணன், அவரது நண்பர் ஆகியோருடன் நேரடியாகக் காண வந்திருந்தார்.
திரையில் மட்டுமே பார்த்து வந்த திவ்யஸ்ரீ கதிரேசன், முதன்முறையாகத் தமது அண்ணன், அவரது நண்பர் ஆகியோருடன் நேரடியாகக் காண வந்திருந்தார். - படம்: லாவண்யா வீரராகவன்

பலவித மக்களைக் கொண்ட, மிகத் திறம்படச் செயலாற்றும் நாடு சிங்கப்பூர் என்று பெருமையுடன் அவர் பகிர்ந்தார். 

“சிறு வயதில் தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பார்த்ததற்கும் தேசியச் சேவையாளராகப் பார்ப்பதற்கும் வேறுபாடு உள்ளது. அணிவகுப்பாளர்களின் திறனையும், நுணுக்கமான பங்களிப்பையும் பார்ப்பதில் பெருமை. அவர்களின் பயிற்சியைக் கண்டு வியக்கிறேன்,” என்றார் சண்முகசுந்தரம் ஸ்ரீஜன், 20. 

“சிங்கப்பூர் எனது வீடு எனும் உணர்வை இந்த அணிவகுப்பு இன்னும் அணுக்கமாக்கியுள்ளது,” என்றார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக உயிர் அறிவியல் துறை மாணவி கிருத்திதா, 20. 

நான் சில ஆண்டுகளுக்குமுன் அணிவகுப்பில் பங்களித்தேன். இம்முறை பார்வையாளராக மீண்டும் கலந்து கொண்டது அந்த நினைவுகளை மீட்டெடுத்தது,” என்றார் தொடக்கப்பள்ளி ஆசிரியரான நிஹால், 25. 

“தேசிய கீதம் பாடும்போதும், பற்றுறுதி ஏற்கும்போதும் கண்கலங்கி நின்றேன். ஏனெனில், சிங்கப்பூர் என் மனத்துக்கு நெருக்கமானது,” என்றார் அவர். 

(இடமிருந்து) உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பரின் வர்தன், சுமன் சிவகுமார்.
(இடமிருந்து) உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பரின் வர்தன், சுமன் சிவகுமார். - படம்: லாவண்யா வீரராகவன்

சிராங்கூன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பரின் வர்தன், சுமன் சிவகுமார் இருவரும் சிறு வயதில் பள்ளி மாணவர்குழுவுடன் நிகழ்ச்சியைக் காணவந்ததாகவும், முதன்முறை நண்பர்களுடன் வந்திருப்பதில் மகிழ்ச்சியென்றும் கூறினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்