போதையில் கார் ஓட்டிய இளையரைத் துரத்திச் சென்ற காவல்துறை

1 mins read
c10d87ee-904b-49b9-bc3b-610cdf345bad
இளையரின் காரி மற்றொரு காருடன் மோதி நின்றது. - படம்: எஸ்ஜி விஜிலாண்டே ஃபேஸ்புக்

போதையில் ஆபத்தாக வாகனம் ஓட்டியதாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) இரவு 10.50 மணிக்கு இளையர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சிஎன்ஏ தகவல் கேட்டதற்கு காவல்துறை இவ்வாறு பதிலளித்திருந்தது. அந்த இளையர் போக்குவரத்து காவல்துறையின் உத்தரவை மதிக்காமல் வாகனத்தைச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையின் வாகனங்களும் அவரைத் துரத்திச் சென்றன. காவல்துறை தகவலின்படி அப்பர் பாய லேபார் சாலையை நோக்கிச் செல்லும் பாய லேபார் சாலையில் போக்குவரத்து காவல்துறை சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தது. அப்போது வழக்கமான சோதனைக்காக அங்கு வந்த காரை காவல்துறையினர் நிறுத்த சைகை செய்தனர். ஆனால், கார் ஓட்டுநர் அறிவுறுத்தலைப் பின்பற்றாமல் பல சாலைகளிலும் வளைந்து வளைந்து வேகமாக ஓட்டிச் சென்றார். இதையடுத்து காவல்துறை வாகனங்களும் காரை பின்தொடர்ந்து சென்றன. “கார் வேகமாகச் சென்றதில் நான்கு கார், ஒரு வேன்மீது மோதியது,” என்று காவல்துறை குறிப்பிட்டது. பின்னர் பிடோக் சவுத் அவென்யூ 1 நோக்கிச் செல்லும் மரின்பரேட் சாலையில் அந்தக் கார் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு மற்றொரு காருடன் அது மோதி நின்றது. தப்பியோடிய காரின் ஓட்டுநர் பின்னர் கைது செய்யப்பட்டார். போலி உரிமத்தைப் பயன்படுத்தியது, காப்புறுதி இல்லாத வாகனத்தை ஓட்டியது, பதிவிலிருந்து நீக்கப்பட்ட வாகனத்தை ஓட்டியது போன்ற குற்றச்செயல்களுக்காக அவரை காவல்துறை விசாரித்து வருகிறது. காரில் மின்சிகரெட் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையின் விசாரணை தொடர்கிறது. இதன் காரணமாக இந்தச் சம்பவம் குறித்து சுகாதார அறிவியல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்