இணைய வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்ய தமது தந்தைக்கு உதவி செய்த இளையர், தந்தையின் மத்திய சேமநிதிக் கணக்கிலிருந்து அவருக்குத் தெரியாமல் $25,000க்கும் அதிகமான தொகையைக் கையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது தந்தையின் காப்புறுதித் திட்டங்களிலிருந்து $68,000க்கும் அதிகமான கடன்களை அந்த இளையர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
அந்தப் பணம் தமது தந்தையின் வங்கிக் கணக்கில் போடப்பட்டதும் அதைத் தமது பேநவ் கணக்கிற்கு அந்த இளையர் மாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இக்குற்றங்களைப் புரிந்தபோது அந்த இளையருக்கு 16 வயது.
தற்போது அவருக்கு 17 வயதாகிறது.
கணினியைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துதல் சட்டத்தின்கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றத்தை அவர் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 3) ஒப்புக்கொண்டார்.
குற்றம் புரிந்தபோது அவருக்கு 16 வயது என்பதால் சிறார், இளையர் சட்டத்தின்கீழ் அவர் பெயரை வெளியிட முடியாது.
தொடர்புடைய செய்திகள்
தந்தையிடமிருந்து பறித்த பணத்தை அந்த இளையர் இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.
ஆனால் அந்த இளையர் வேலைக்குச் சென்று சம்பாதிக்கத் தொடங்கியதும் தமது தந்தையிடம் பணத்தைக் திருப்பிக் கொடுத்துவிடுவார் என்று அந்த இருவரிடையே ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
நன்னடத்தைக் கண்காணிப்புத் தகுதிக்கான அறிக்கைக்கும் சீர்திருத்தப் பயிற்சி தகுதி அறிக்கைக்கும் நீதிபதி அழைப்பு விடுத்தார்.
தீர்ப்பு அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.