குறுநடை போடும் தன்னுடைய இரு குழந்தைகளையும் பால்மாவு திருடுவதற்காக தன்னோடு பேரங்காடிக்கு அழைத்துச் சென்றதுடன் அவர்களின் ‘ஸ்ட்ரோலர்’ எனப்படும் குழந்தைத் தள்ளுவண்டியைத் திருட்டுக்காக பயன்படுத்திக்கொண்டார் 26 வயது லொரேய்ன் சான் சூ யி.
சிங்கப்பூரரான சான், திருட்டு தொடர்பான இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஜூன் 13ஆம் தேதி $3,500 அபராதம் விதிக்கப்பட்டது.
புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் உள்ள ஷெங் சியோங் பேரங்காடிக்கு 2023ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி சான் தன்னுடைய இரண்டு, மூன்று வயதுகளுடைய குழந்தைகளை அழைத்துச் சென்றதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
சான் குழந்தைகளின் ஸ்ட்ரோலரில் $270.70 மதிப்பிலான பால்மாவைக் கட்டணம் செலுத்தாமல் பதுக்கிவைத்தார்.
மூன்று நாள்களுக்குப் பிறகு ‘ஐஎம்எம்’ கட்டடத்தில் உள்ள ஜாயன்ட் பேரங்காடிக்கு தன்னுடைய கணவருடன் சென்றார் சான்.
அங்கு மூன்று சரக்குப் பெட்டிகளை அந்தத் தம்பதி எடுத்துக்கொண்டு அவற்றில் $1,565.40 மதிப்பிலான பால்மாவை வைத்தனர்.
சுயசேவை கட்டணச் சாவடியில் இருவரும் வேறு பொருள்களுக்கான பணத்தைச் செலுத்திவிட்டு தப்பித்துவிட்டனர்.
சான் அதையடுத்து கரோசல் தளத்தில் பால்மாவை $1,170 விலைக்கு விற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடை இருப்புகளைச் சரிபார்த்தபோது பால்மாவு திருடு போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்தத் திருட்டுக்கு மூளையாக இயங்கியவர் சானின் கணவர் லிம் சூன் லியோங் என்று கூறப்பட்டது.
லிம்முக்கு ஏற்கெனவே 11 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.