இளம் தலைமுறையினர் இணையவழி தீவிரவாதத்திற்கு எளிதில் ஆளாகக்கூடியவர்களாக இருப்பது மட்டுமின்றி, அதற்கு எதிரான சிங்கப்பூரின் மிக வலுவான தடுப்பு அரணாகவும் திகழ முடியும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 17) நடைபெற்ற அமைப்புகளுக்கிடையிலான பின்நலச் சேவை குழு (ஏசிஜி) அமைப்பின் இளையர் கருத்தரங்கில் பேசிய அவர், இணைய உலகைப் பல பெரியவர்களை விடவும் இளையர்கள் நன்கு புரிந்துகொண்டிருப்பதாகவும், இணையச் சமூகங்கள் எவ்வாறு கருத்துகளை வடிவமைக்கின்றன, ஒருவிதமான சொந்த உணர்வை உருவாக்குகின்றன என்பதை அவர்கள் அறிந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு நண்பர் ஆபத்தான பாதையில் செல்வதை முதலில் கண்டறியக்கூடியவர்கள் இளையர்களாகவே இருக்கலாம் என்றும் அந்த நண்பர் மற்றவர்களை விட இவர்களுடைய பேச்சிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கேட்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
“யாராவது வன்முறைக்கு ஆதரவு தெரிவித்தால் அல்லது மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தினால், உடனடியாக அது குறித்துத் தெரியப்படுத்துங்கள். அந்தச் சூழலை நீங்களே கையாள முயற்சிக்காதீர்கள்,” என்று தற்காப்பு மூத்த துணை அமைச்சருமான ஸாக்கி கூறினார்.
“சில நேரங்களில் நண்பர்களுக்கு இடையிலான ஒருவித விசுவாச உணர்வு குறுக்கிடலாம். ஒருவருக்கு எதிராகப் பேசினால், அது நண்பருக்குத் துரோகம் செய்வதாக அமைந்துவிடுமோ என்று நீங்கள் அஞ்சலாம். ஆனால், உண்மையில் ஆரம்பக்கட்ட ஆலோசனைகளும் தலையீடுகளும், ஒருவர் தீவிரவாதப் பாதையில் செல்வதைத் தடுத்து, அதிலிருந்து விலகி வர உதவக்கூடும்,” என்றார் அவர்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த மன்றத்தில், மதரஸாக்கள், தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொடக்கக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் இணையவழித் தீவிரவாதம் குறித்து அறிந்துகொண்டனர்.
தொடர்ந்து, தாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை உண்மை வாழ்க்கைச் சூழல்களுக்குப் பொருத்தி, 30 நொடி நீளமுள்ள காணொளிகளை அவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் உருவாக்கினர்.
இணையவழி தீவிரமயமாக்கலின் அச்சுறுத்தல் குறிப்பாக இளையர்களிடையே அதிகரித்து வருகிறது என்று உள்துறை அமைச்சு கூறியது.
செப்டம்பர் 10ஆம் தேதி வெளியிடப்பட்ட தனது வருடாந்தர பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில், இளையர்கள் தீவிரவாதச் சிந்தனைகளுக்கு ஆளாவது ஒரு கவலைக்குரிய விஷயம் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இளையர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது, 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் நான்கு சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், 2022ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கருத்தரங்கு, சுயஉதவிக் குழுவான ‘மெண்டாக்கி’ , ஏசிஜி, உள்துறை அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
