சிங்கப்பூரில் உள்ள இளையர்களில் நான்கில் ஒருவர், உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கமில்லாமல் சுயமாகக் காயப்படுத்திக்கொள்வதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
சுயமாகக் குத்திக்கொள்வது, கத்தியால் வெட்டிக்கொள்வது தீக்காயங்கள் ஏற்படுத்திக்கொள்வது அவற்றில் அடங்கும்.
சராசரியாக 14 வயது ஆகும்போது இத்தகைய பழக்கம் தொடங்குவதாக ஆய்வு கூறுகிறது.
இப்பழக்கத்தால் பாதிப்படைந்துள்ள ஆண்கள் 18 வயதாகும்போது இப்பழக்கம் இரண்டாவது முறையாக உச்சமடைவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஏறத்தாழ 13.5 விழுக்காட்டினர் தம்மைத் தாமே வெட்டிக்கொண்டு காயமடையும் பழக்கத்தைக் கொண்டுள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுவே காயப்படுத்திக்கொள்ளும் முறைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதையடுத்து மிக மோசமாக கீறிக்கொள்வது, சுயமாகக் குத்திக்கொள்வது, சுவரில் தலையை முட்டிக்கொள்வது ஆகியவை இடம்பெறுகின்றன.
இந்த ஆய்வின் முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்பட்டன.
தேசிய இளையர் மனநல ஆய்விலிருந்து அது தரவுகளைப் பெற்றுக்கொண்டது.
ஆய்வில் 2,600 பேர் பங்கெடுத்தனர்.
அவர்கள் 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
தேசிய ஆய்வை மனநலக் கழகம் நடத்தியது.
இத்தகைய பழக்கம் மனநலக் குறைபாட்டின்கீழ் வராது என்றும் அதற்கு மற்ற பல காரணங்கள் இருக்கக்கூடும் என்றும் மனநலக் கழகத்தின் மருத்துவ சபையின் தலைவரான டாக்டர் சுவப்னா வர்மா கூறினார்.
“கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டு, அதை வெளிப்படுத்த வேறு வழிகள் இல்லாதபட்சத்தில் சுயமாகக் காயப்படுத்திக்கொள்ளும் பழக்கத்துக்கு இளையர்கள் ஆளாகும் சாத்தியம் உள்ளது.
“கலவை, கோபம், பதற்றம் போன்ற உணர்வுகளிலிருந்து தற்காலிக நிவாரணத்தை இது சிலருக்குத் தருகிறது. மன அழுத்தத்தைச் சமாளிக்க ஒரு சிலர் சுயமாகக் காயப்படுத்திக்கொள்ளும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கக்கூடும்,” என்றார் டாக்டர் வர்மா.
யாருக்கும் தெரியாதபடி இளையர்கள் சுயமாகக் காயப்படுத்திக்கொள்ளக்கூடும் என்பதால் பெற்றோர், பராமரிப்பாளர்கள் ஆகியோருக்கு இது தெரியாமல் போகக்கூடும் என்று அவர் கூறினார்.
எனவே, இந்தப் பழக்கம் குறித்து பெற்றோர், பராமரிப்பாளர்கள் ஆகியோர் தெரிந்துகொண்டால் நல்லது என்றார் அவர்.
அவ்வாறு தெரிந்துகொண்டால் இளையர்களின் உடல்களில் திடீரென்று காயங்களைக் கவனித்தால் உடனடி நடவடிக்கைகளை எடுக்க அது உதவும் என்று டாக்டர் சுவப்னா கூறினார்.


