சீனாவில் அஞ்சலோட்டம் நடத்தி $44,000 நிதி திரட்டிய இளையர்கள்

சீனாவில் அஞ்சலோட்டம் நடத்தி $44,000 நிதி திரட்டிய இளையர்கள்

2 mins read
5fd97de8-69aa-474b-8eeb-55a80b93ea5d
(இடமிருந்து) திமத்தி ஃபூ, ராயன் டே, ஹென்சன் ஜிங் ஆகியோர் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்டினர். - படம்: செரின் சியார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று இளையர்கள், சீனாவில் ஏற்பாடு செய்த அஞ்சலோட்டம் மூலம் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக $44,000க்கும் அதிகமான நிதியைத் திரட்டியுள்ளனர்.

சீனாவின் ‌‌‌‌ஷாங்காய் உயர்நிலைப் பள்ளியின் அனைத்துலகப் பிரிவில் பயின்றுகொண்டிருந்தபோதே திமத்தி ஃபூ, ஜன்சென் ஜிங், ராயன் டே ஆகிய மூவரும் நண்பர்களாகினர். மூவரும் கிட்டத்தட்ட 20 வயதுகளில் உள்ளோர்.

“புற்றுநோயாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் சிரமப்படுவதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. எங்களால் பெரிய அளவில் எதுவும் செய்ய முடியாது. எனவேதான் அஞ்சலோட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார் ஃபூ.

கிவ்.ஆ‌ஷியாவில் நம்பிக்கை இயக்கத்தின் அஞ்சலோட்டத்தின்கீழ் $20,000 நிதியைத் திரட்ட திட்டமிட்டனர். ஆனால், அவர்கள் எதிர்பார்ப்பையும் மீறி $44,500 நிதி திரட்டப்பட்டது. அந்த நிதி சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் புற்றுநோய் நிலைய நிதிக்கு நேரடியாக வழங்கப்படும்.

மூன்று இளையர்களும் புற்றுநோய்க்கு நிதியளிக்க ஒரு முக்கியக் காரணம் உண்டு. ஏதோ ஒரு வகையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரை அவர்கள் மூவரும் சந்தித்துள்ளனர்.

“புற்றுநோய் பற்றி எதேச்சையாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் எங்கள் அனைவரின் உற்றார் உறவினர் மத்தியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் இருந்தனர் என்பதைக் கண்டறிந்தோம். என் உறவினரில் ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்தார்,” என்று ஃபூ குறிப்பிட்டார்.

டேயின் தாத்தா நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தார்.

அவரது தாயாரும் மற்றோர் உறவினரும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.

ஜிங்கும் தமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் பத்தாண்டுக்குமேல் புற்றுநோயால் அவதியுறுவதாகக் கூறினார்.

மூன்று இளையர்களின் அஞ்சலோட்டமும் சீனாவின் ‌‌‌‌‌ஷாங்காயில் தொடங்கியது. 630 கிலோமீட்டர் தூரம். 10 நாள்கள், ஒவ்வொரு நாளும் நிற்காமல் 21 கிலோமீட்டர் தூரம் ஓடவேண்டும்.

“எந்தக் குறுக்கு வழியையும் எடுக்கக்கூடாது என்று நாங்கள் தீர்மானித்தோம்,” என்றார் ஜிங்.

குறிப்புச் சொற்கள்