விலங்குநல மருத்துவர்களுக்குத் தீர்வளிக்க நிரல் கற்ற இளையர்கள்

2 mins read
b1e63ee0-5cb7-4fce-ad0b-8b9b8f6e8357
இரண்டாம் ஆண்டு வணிகவியல் மாணவர்களான ஹ்யுகா கராமோச்சியும் கேலப் யாப் கீன் யாங்கும் கால்நடை மருத்துவர்களுக்காக ‘பிராபி’ (Broby) என்ற செயற்கை நுண்ணறிவுக் கருவியை உருவாக்கியுள்ளனர்.  - படம் சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி

சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியைச் சேர்ந்த 18 வயது மாணவர்கள் இருவர்க்குத் தங்கள் செல்லப் பிராணிகளுடனான தனிப்பட்ட போராட்டம், தொழில் முனைவோர் வெற்றிக் கதைக்கு வித்திட்டது.

இரண்டாம் ஆண்டு வணிகவியல் மாணவர்களான ஹ்யுகா கராமோச்சியும் கேலப் யாப் கீன் யாங்கும் விலங்குநல மருத்துவர்களுக்கான ஆவணங்களைத் தானியக்க முறையில் எழுதும் ‘பிராபி’ (Broby) என்ற செயற்கை நுண்ணறிவுக் கருவியை உருவாக்கியுள்ளனர்.

ஹ்யுகாவின் நான்கு வயது நாய் ‘ஆபி’க்கு 2024ல் சிறியதோர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கூம்பு வடிவிலான ‘எலிசபெதன் காலர்’ கழுத்துப்பட்டையை அணிய சிரமப்பட்டதை  அவர் கண்டார். 

செல்லப் பிராணிகள் தனது காயங்களை நக்குவதைத் தடுக்க, கசப்பான சுவையுடைய கழுத்துப்பட்டையை உருவாக்கும் யோசனை அவருக்கு ஏற்பட்டது.

வகுப்பு தோழர்களான இவர்கள் இருவரும் தங்கள் செல்லப் பிராணிகளின் பெயர்களை (காலேபின் நாய் ‘பிரவுனி’, ஹ்யுகாவின் நாய் ‘ஆபி’) இணைத்து ‘பிராபி’  என்ற திட்டத்தை அமைத்தனர்.

தொடக்கத்தில்  அவர்களின் ஆரம்ப யோசனையை விலங்கு மருத்துவர்கள் வரவேற்கவில்லை. 

கசப்பான கழுத்துப் பட்டைகள் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதாகவும், மிகக் கசப்பானவற்றைக் கூட பெரும்பாலான நாய்கள் கடித்து அகற்றிவிடும் என்றும் அவர்கள் கூறினர்.

“அந்த யோசனை பலனளிக்கவில்லை, ஆரம்பத்தில் அது ஒரு பின்னடைவு போல இருந்தது,” என்று கேலப் கூறினார். 

இருந்தபோதும், விலங்குநல மருத்துவர்கள் அதிக நேரத்தை ஆலோசனைக் குறிப்புகள் எழுதுவதிலேயே செலவிடுவதாக அந்த இளையர்கள் கவனித்தனர்.

கால்நடை மருத்துவ ஆலோசனைக் குறிப்புகளையும் ஆராய்ச்சிக்குத் தேவையான தரவுகளையும் தானாகவே உருவாக்கும் செயற்கை நுண்ணறிவுக் கருவி ஒன்றை  உருவாக்க அவர்கள் முடிவு செய்தனர்.

இதற்கு முன்பு கணினி நிரல்களை உருவாக்கத் தெரியாத அவ்விருவரும் தாங்களாகவே அதனைக் கற்றுக்கொண்டனர். அத்துடன் கணினித்துறை  பள்ளி நண்பர்கள் மற்றும் வெளி வழிகாட்டிகளின் உதவியையும் நாடினர்.

பணம் மட்டுமே தங்களின் நோக்கமன்று என்றனர் இந்த இளையர்கள்.

 “செல்லப் பிராணிகளுக்கும் அவற்றைப் பராமரிக்கும் மருத்துவர்களுக்கு வசதியை அதிகரிப்பதும் எங்கள் நோக்கமாகும். நாங்கள் விரும்பியே இதனைச் செய்கிறோம்,” என்று கேலப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்